பாகிஸ்தானின் பொறுப்பற்ற செயலால்.. விமான போக்குவரத்தில் இழப்பு! நமக்கும் சிக்கல்!
டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இருநாடுகளும் தங்களின் வான் எல்லையை அண்டை நாடுகளின் விமானங்களுக்கு மூடியிருக்கின்றன. இதனால் நமக்கும் பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
முதலில் வான் எல்லையை மூடியது பாகிஸ்தான்தான். எனவே நாமும் வேறு வழியின்றி மூடிவிட்டோம். இப்போது இரு நாடுகளும் நஷ்டத்தை எதிர்கொண்டிருக்கின்றன.

இரு நாடுகளுக்கும் இழப்பு
ஒப்பீட்டளவில் பாகிஸ்தானை விட இந்திய விமான போக்குவரத்து துறை பெரியது என்பதால் பாதிப்பு நமக்குதான் அதிகமாக இருக்கிறது. கடந்த 22ம் தேதி பஹல்காம் தாக்குதல் நடந்தது. அதை தொடர்ந்து 24ம் தேதி பாகிஸ்தான் இந்திய விமானங்களுக்கு தனது வான் எல்லையை மூடியது. அதாவது இந்தியாவை சேர்ந்த ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் போன்ற விமானங்கள் இனி பாகிஸ்தான் மேல் பறக்க முடியாது. இது இந்திய விமான நிறுவனங்களுக்கு கடுமையான இழப்புதான்.
ஏர் இந்தியாவுக்கு சிக்கல்
இந்த தடை ஒரு வாரத்திற்கு தொடர்ந்தால் ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 600 மில்லியன் டாலர் அளவுக்கு இழப்பை சந்திக்கும். காரணம் விமானங்கள் மாற்று பாதையில் செல்வதுதான். இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்கும், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்ல வேண்டும் எனில் பாகிஸ்தானின் வான் பரப்பை கடந்துதான் போக வேண்டும். இப்போது தடை இருப்பதால் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே 1.30 மணி நேரம் வரை டைம் வேஸ்ட் ஆகிறது.
கூடுதல் செலவு
நேரம் அதிகமாக எடுப்பதால் எரிபொருள், விமான பணியாளர்கள் குழுவினர் அதிகம் தேவைப்படுகின்றனர். உதாரணமாக ஒரு விமானத்தின் பயண நேரம் 8 மணி நேரம் எனில் பைலட், உதவி பைலட், விமான பணியாளர்கள் என ஒரு குழு போதுமானது. ஆனால் இதுவே அந்த விமானம் 10.30 மணி நேரம் பறக்கிறது எனில், அங்கு இரண்டு குழுக்கள் தேவை. இப்படித்தான் விமான சட்டங்கள் கூறுகிறது. எனவே விமான நிறுவனங்களுக்கு செலவு அதிகம்.
இந்திய விமான நிறுவனங்கள்
அதேபோல மாற்று விமான பாதையை பயன்படுத்துவது சிக்கலுக்கு உரியது. மாற்று பாதைக்காக வாரத்திற்கு ரூ.77 என மாதத்திற்கு ரூ.306 கோடியை விமான நிறுவனங்கள் செலவு செய்கின்றன. இதெல்லாம் இந்திய விமான நிறுவனங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்.
பாகிஸ்தானுக்கும் சிக்கல்
பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கும் இதேபோன்று பிரச்சனைகள் இருக்கின்றன. அதாவது அந்நாட்டின் விமான நிறுவனங்களுக்கு நாம் தடை விதித்திருக்கிறோம். நம்முடைய வான் பரப்பில் அந்நாட்டு விமானங்கள் பறக்காது.
வருமானத்தை இழக்கும் பாக்
இதன் மூலம் அந்நாடு ஓவர்ஃபிளைட் கட்டணம் எனும் முக்கிய வருமானத்தை இழக்கிறது. அதாவது, ஒரு நாட்டின் மீது விமானம் பறக்க வேண்டும் எனில், அதற்காக அந்நாட்டுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதைத்தான் ஓவர்ஃபிளைட் கட்டணம் என்கிறார்கள். போயிங் 737 விமானத்தை எடுத்துக்கொண்டால் அதற்காக ரூ.40,000 வரை கட்டணம் செலுத்த வேண்டும். இதுவே போயிங் 777 போன்ற பெரிய விமானங்கள் எனில் அதற்காக ரூ.1.4 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.
இதற்கு முன்னாடியும் நடந்திருக்கு
நமது இந்திய விமான நிறுவனங்கள் இப்படி கட்டணங்களை செலுத்திதான் பாக் வான் பரப்பை பயன்படுத்தி வந்தது. ஒரு நாளைக்கு ரூ.1 கோடி வரை இந்நிறுவனங்கள் கட்டணத்தை கட்டுகின்றன. ஆனால் இந்த வருவாயை தற்போது பாக். இழந்திருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதல் நேரத்திலும் இதே போன்று சுமார் 5 மாதங்களுக்கு வான் எல்லையை அந்நாடு மூடி வைத்திருந்தது. இதனால் ரூ.839.4 கோடி வரை பாகிஸ்தான் இழப்பை சந்தித்தது.
கூடுதலாகும் பயண நேரம்
மறுபுறம் பாக். விமான நிறுவனங்கள் வேறு சில இழப்புகளையும் சந்தித்திருக்கின்றன. அதாவது பாகிஸ்தானிலிருந்து சிங்கப்பூருக்கு போகும் விமானங்கள் இந்தியாவை கடந்துதான் போக வேண்டும். இப்போது இந்திய வான் பரப்பை பயன்படுத்த முடியாது என்பதால், இந்த விமானங்கள் சீனா வழியாக போக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளன. இதனால் பயண நேரம் சராசரியை விட 3 நேரம் கூடுதலாகியிருக்கிறது.
இமயமலையால் சிக்கல்
சீனா வழியாக போக வேண்டும் எனில், இமயமலையை எதிர்கொள்ள வேண்டும். இமயமலைக்கு மேல் பறப்பதை எந்த விமானியும் விரும்ப மாட்டார். காரணம் இமயமலையின் உயரம் 8 கி.மீ. பயணிகள் விமானங்கள் இதை விட உயரமாகத்தான் பறக்கும்(8-10 கி.மீ உயரம்). ஆனால் இமயமலை பகுதியில் வானிலையில் திடீர் மாற்றம் ஏற்படும். மட்டுமல்லாமல் உயரத்தை கணிப்பதில் திடீர் மாற்றங்கள் ஏற்படலாம் எனவே விபத்துகள் நடக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அப்படி பார்க்கும்போது பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு இது பெரிய பிரச்சனை.
தீர்வு என்ன?
இவ்வளவு பெரிய நெருக்கடிகளுக்கு காரணம் பாகிஸ்தானின் பொறுப்பற்ற தன்மைதான். எனவே மோதல் போக்கை பாக் கைவிட்டு பிரச்சனையை தீர்க்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முன் வர வேண்டும் என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications