விசா கிடைக்காமல் தவிக்கும் இந்தியர்கள்.. அதிகாரப்பூர்வமாக தலையிட்ட மத்திய அரசு.! மிக முக்கிய மாற்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்கா செல்லக் காத்திருந்த பல நூறு இந்தியர்களின் விசா நேர்காணல்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. பலருக்கும் அடுத்தாண்டு அக்டோபருக்குக் கூட விசா தள்ளிவைக்கப்பட்டது. இதனால் இந்தியர்கள் பலரும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு முதல்முறையாக மவுனம் கலைத்துள்ளது. விசா விவகாரம் குறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கும் முதல் கருத்து இதுவாகும்.

ஒவ்வொரு ஆண்டும் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்காக இந்தியர்கள் அதிகளவில் அமெரிக்கா செல்கிறார்கள். அமெரிக்காவில் டெக் துறையில் திறமையான ஊழியர்களுக்குப் பற்றாக்குறை இருக்கும் சூழலில், அதை இந்தியர்களே நிரப்புகிறார்கள். இதனால் ஹெச்-1பி விசா பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் தான் விசா விவகாரத்தில் பெரிய பிரச்சினை வெடித்தது.

H-1b visa visa India

ஹெச்-1பி விசா நேர்காணல்கள்

அதாவது இந்தியர்களின் ஹெச்-1பி விசா நேர்காணல்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. டிசம்பர் 2வது வாரம் முதல் நடக்கவிருந்த விசா நேர்காணல்கள் மொத்தமாக ரத்து செய்யப்பட்டன. பலருக்கும் மார்ச் மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டன. சிலருக்கு அக்டோபர் மாதம் வரையிலும் கூட விசா நேர்காணல்கள் தள்ளி வைக்கப்பட்டன. இதனால் இந்தியர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

தலையிட்ட மத்திய அரசு

இதற்கிடையே H-1b விசா நேர்காணல் ரத்து தொடர்பாக மத்திய அரசு முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளது. விசா நேர்காணல் ரத்து குறித்து இந்தியா முறைப்படி அமெரிக்காவிடம் தனது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது. தங்களின் விசா நேர்காணல் ரத்து செய்யப்பட்டதாகப் பல்வேறு தரப்பினரும் புகாரளித்த நிலையில், வெளியுறவு அமைச்சகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

முக்கிய மாற்றம்

இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "விசா விவகாரங்களில் முடிவெடுப்பது என்பது அமெரிக்காவின் அதிகார வரம்புக்குட்பட்டவை. இருப்பினும், இந்தச் சிக்கலை அமெரிக்கத் தூதர்களிடம் இந்திய அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர். இந்த திடீர் விசா நேர்காணல் ரத்து காரணமாக ஏற்பட்ட தாமதங்களால் பல்வேறு நபர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக அமெரிக்காவில் கல்வி கற்கச் சென்ற இந்தியர்களின் கல்வியில் இது பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்கள் மீதான தாக்கத்தைக் குறைக்கவும், இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவும் இந்திய அரசு அமெரிக்கத் தரப்புடன் தீவிரமாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

அடுத்து என்ன!

இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் விசா விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது. உலகளவில் ஹெச்-1பி விசா கோரி விண்ணப்பிப்போரின் நேர்காணல்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்தியர்களே ஹெச்-1பி விசாவை அதிகம் பயன்படுத்தும் நிலையில், இந்தியாவில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இந்தியா தனது கவலைகளை அமெரிக்காவிடம் வெளிப்படுத்திய போதிலும், நிலைமை எப்போது சீராகும் என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை.

விசா நேர்காணல் சிக்கல் ஒரு பக்கம் என்றால் ஹெச்-1பி விசா முறைகளிலும் பல கட்டுப்பாடுகளைக் கொண்டு வர அமெரிக்கா முடிவு செய்துள்ளது. திறமையான ஊழியர்களுக்கு மட்டுமே ஹெச்-1பி விசா செல்வதை உறுதி செய்ய டிரம்ப் அரசு குறைந்தபட்ச ஊதிய விதியைக் கொண்டு வருகிறது. இதன் மூலம் குறைந்த சம்பளத்தில் ஹெச்-1பி விசா கோரி விண்ணப்பிப்போருக்கு விசா கிடைக்காது. மேலும், ஹெச்-1பி விசா முறையில் குலுக்கல் முறையும் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக அதிகம் சம்பளம் வாங்குவோருக்கு விசா கொடுக்கும் முறையும் முன்மொழியப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+