உலக நாடுகளிலேயே இந்தியாவில்தான் முதல் முறையாக ஒரே நாளில் கொரோனாவால் 4,525 பேர் மரணம்
டெல்லி: உலக நாடுகளிலேயே இந்தியாவில்தான் முதல் முறையாக ஒரே நாளில் கொரோனாவால் 4,525 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 2,67,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,48,79,476. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் எண்ணிக்கை 14,38,04,269. கொரோனாவால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 34,18,041.

பாதிப்பில் சற்று குறைவு
இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது. 3 லட்சத்தைத் தாண்டியதாக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 2.61 லட்சமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2,67,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதி உச்ச மரணங்கள்
அதேநேரத்தில் இந்தியாவில் கொரோனா மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் கடந்த 2 நாட்களாக கொரோனா மரணங்கள் 4,000-த்தை தாண்டியதாக உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் அதி உச்சமாக 4,525 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகளில் மிக அதிகம்
அமெரிக்காவில் கடந்த ஜனவரி 12-ந் தேதியன்று 4,468 பேர் ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்ததுதான் இதுவரை அதிகபட்சமான மரணங்கள் எண்ணிக்கை. இதற்கு அடுத்ததாக பிரேசிலில் ஏப்ரல் 6-ந் தேதியன்று 4,211 பேர் ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்திருந்தனர். இந்த நிலையில் உலக நாடுகளிலேயே மிக அதிக அளவிலான ஒருநாள் மரணங்கள் நேற்று இந்தியாவில் நிகழ்ந்துள்ளன.

மகாராஷ்டிராவில் 1,291 பேர் பலி
மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் மிக அதிகபட்சமாக 1,291 பேர் ஒரே நாளில் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் நேற்று 525 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் செவ்வாய்க்கிழமையன்று 364 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் பாதிப்பு அதிகம்
அதேநேரத்தில் மகாராஷ்டிராவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு சற்று குறைந்தே உள்ளது. செவ்வாய்க்கிழமையன்று 28,438 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தமிழகத்தில்தான் அதிகபட்சமாக 33,059 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications
