இந்தியாவில் 36,401 பேருக்கு புதிய கொரோனா தொற்று உறுதி - 530 பேர் மரணம்
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 36,401 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 39,157 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
டெல்லி: கொரோனா 3 வது அலை பற்றிய அச்சம் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த 24 மணிநேரத்தில் 36,401 பேருக்கு புதிதாக பாதித்துள்ளது. கொரோனா பாதித்தவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 530 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் 21 கோடி பேரை கொரோனா வைரஸ் தொட்டுள்ளது. 19 கோடி பேர் குணமடைந்திருந்தாலும் உலகம் முழுவதும் 44 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா முதல் அலைக்கு அமெரிக்கா முழுவதும் 3 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். கொரோனா இரண்டாவது அலைக்கு இந்தியா முழுவதும் 3 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 4 லட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,401 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,23,22,258 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 39,157 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,15,25,080 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைந்தோர் விகிதம் 97.52 சதவிகிதம் ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 530 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,33,049 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,64,129 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.14% ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 56,64,88,433 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 56,36,336 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் தினசரி பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த 2 நாட்களுக்கு முன்பு 25 ஆயிரமாக இருந்த நிலையில் மீண்டும் 36,401ஆக அதிகரித்துள்ளது.
போலி தடுப்பூசி எச்சரிக்கை
நாடு முழுவதும் கோவிஷீல்ட், கோவாக்ஷின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனைகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து சந்தையிட்டு வருகிறது. மேலும் இந்த தடுப்பூசி, இந்திய அரசின் தடுப்பூசி திட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த தடுப்பூசியின் போலி தடுப்பூசிகள் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்தியாவிலும், உகாண்டாவிலும் கோவிஷீல்டு தடுப்பூசியின் போலி தயாரிப்புகள், நோயாளிகள் மட்டத்தில் கண்டறியப்பட்டு, அதை தடுப்பூசி உற்பத்தியாளர்களான புனே இந்திய சீரம் நிறுவனம் சரி பார்த்துள்ளனர்.
இது தொடர்பாக கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் உலக சுகாதார அமைப்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியின் உண்மையான உற்பத்தியாளர் புனே இந்திய சீரம் நிறுவனம் இந்த எச்சரிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள தயாரிப்புகள் போலியானவைதான் என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த போலியான தடுப்பூசிகள் இந்தியா மற்றும் உகாண்டாவில் நோயாளிகள் மட்டத்தில் பதிவாகி உள்ளன.\
போலியான தடுப்பூசிகள் உலகளாவிய பொது சுகாதாரத்துக்கு ஆபத்து ஏற்படுத்தும். பாதிக்கப்படக்கூடிய மக்கள் மற்றும் சுகாதார அமைப்பின்மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தும். நோயாளிகளுக்கு கெடுதல் விளைவிப்பதைத் தடுக்க இந்த தவறான தயாரிப்புகளை புழக்கத்தில் இருந்து கண்டறிந்து அகற்றுவது முக்கியம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கோவிஷீல்டு போலி தடுப்பூசி பற்றிய தகவல்கள், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications