இந்தியாவில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- தமிழ்நாட்டில் நீண்ட இடைவெளிக்குப் பின் ஒருவர் மரணம்?
இந்தியாவில் கொரோனா கேஸ்கள் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகின்றன.
டெல்லி: இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கொரோனா பாதிப்பால் திருச்சியில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பெருமளவு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு விட்டது. ஆனாலும் கொரோனா பாதிப்பு லேசாக இருந்து வருகிறது.
உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 66,510 ஆக பதிவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 681,485,333 ஆக அதிகரித்தது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 654,388,433. கொரோனாவால் உலக நாடுகளில் இதுவரையில் 6,811,729 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக நாடுகளில் நேற்று ரஷ்யாவில் அதிகபட்சமாக 12,241 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. ரஷ்யாவை தொடர்ந்து தென்கொரியாவில் 9,867, ஜப்பானில் 9,100, தைவானில் 8,618, பிரான்ஸில் 6,072, ஆஸ்திரியாவில் 4,510 என கொரோனா பாதிப்பு பதிவானது.
கொரோனாவால் நேற்று மட்டும் உலக நாடுகளில் 317 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஜப்பானில்தான் மிக அதிகபட்சமாக ஒரே நாளில் 118 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தைவானில் 48; ரஷ்யாவில் 42 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 524 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நேற்று காலை 8 மணியுடனான 24 மணிநேரத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 456 ஆக இருந்தது.

ஆனால் நமது நாட்டில் 113 நாட்களுக்கு பின்னர் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பது கவலைக்குரியதாகும். நமது நாட்டில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,618. மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது என்கின்றன புள்ளி விவரங்கள்.
இந்தியாவில் கொரோனாவால் மொத்தம் 530781 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா சிகிச்சைக்குப் பின் 44156093 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் இதுவரை 220,64,54,554 டோஸ்கள் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இதனிடையே தமிழ்நாட்டில் திருச்சியில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்ற ஒருவர் மரணம் அடைந்துள்ளார். திருச்சி மேலசிந்தாமணியை சேர்ந்த பொறியாளர் ஒருவர் பெங்களூரில் பணியாற்றினார். காய்ச்சல், இருமல் காரணமாக திருச்சியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்தார்.












Click it and Unblock the Notifications