எல்லையில் வேலையை காட்டத் தொடங்கிய பாகிஸ்தான்.. உடனுக்குடன் பதிலடி கொடுத்து மிரட்டிய இந்திய ராணுவம்!
டெல்லி: எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
ஒருசில இடங்களில் சிறிய அளவில் துப்பாக்கிச் சூடுகளை பாகிஸ்தான் ராணுவம் தொடங்கியதாக கூறப்படுகிறது. அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ள நிலையில், இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என இந்திய ராணுவ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 29 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப் பொறுப்பேற்றுள்ளது.
அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த பயங்கர தாக்குதல் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பயங்கரத்தை நிகழ்த்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த தாக்குதலை அரங்கேற்றிய பயங்கரவாதிகள், அவர்களுக்கு பின்னால் இருப்பவர்களை தேடி கண்டுபிடித்து வேட்டையாடுவோம் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்து உள்ளது. அந்தவகையில் இரு நாட்டு எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் வான் பரப்பு மூடல், வாகா எல்லை மூடல் என்ற அடாவடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தச் சூழலில் ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) பாகிஸ்தான் இராணுவத்தினர் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய பாதுகாப்புப் படையினர் திறம்பட பதிலடி கொடுத்தனர் என்றும், இந்த அட்டாக்கில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் இந்திய ராணுவ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக என்.டி.டி.வி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications