போர் விமான விஷயத்தில் இந்தியாவுக்கு ஏன் இந்த தடுமாற்றம்? சொந்தமாக ஜெட் தயாரிக்கும் திட்டம் தோல்வியா?
டெல்லி: இந்தியாவுக்கு போர் விமானங்களை விற்க அமெரிக்காவும், ரஷ்யாவும் முந்திக்கொண்டு வருகின்றன. இதில் எதை வாங்குவது என்பது குழப்பமாக இருக்கிறது. மறுபுறம் இந்தியா சொந்தமாக போர் விமானங்களை தயாரிக்க மேற்கொண்ட முயற்சிகள் என்ன ஆனது? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
இது குறித்து 'தி இந்து' செய்தி ஊடகத்தில் இன்று வெளியான கட்டுரை மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது. இதில் அமெரிக்க, ரஷ்ய போர் விமானங்கள் குறித்தும், இந்தியாவின் ஜெட் தயாரிப்பு திட்டம் குறித்தும் அலசப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் F-35 விமானத்தின் சிறப்பு:
இது ஒற்றை இருக்கை மற்றும் ஒற்றை என்ஜின் கொண்ட விமானமாகும். மறைந்திருந்து தாக்கும் திறன்தான் இதன் சிறப்பம்சம். குறிப்பாக ரேடார் சிக்னலிலிருந்து தப்பிக்கும் திறன் காரணமாக உலகின் மிக வலுவான போர் விமானமாக இது இருக்கிறது. மொத்தம் 3 வகைகள் இதில் இருக்கின்றன.
1. F-35A
2. F-35B
3. F-35C
இதில் முதல் வகை விமானம், விமானப்படைக்காக ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்டது. வேவு பார்த்தல், சண்டையிடுதல், மறைந்திருந்து தாக்குதல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. 2வது வகை, மரைன் கார்ப்ஸுக்கு உருவாக்கப்பட்டது. அதாவது போர் கப்பலில் தரையிறங்கவும், குறைந்த தூரத்திலிருந்து பறக்கவும் தயாரிக்கப்பட்டிருக்கிறது. 3வது வகை கடற்படைக்கு என தனிச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
என்னதான் இது மூன்றும் சிறப்பானதாக இருந்தாலும், இந்திய வீரர்கள் இதுவரை அமெரிக்க போர் விமானங்களை கையாண்டது கிடையாது. நம்மிடம் இருக்கும் அமெரிக்க விமானங்கள் போக்குவரத்து, கண்காணிப்பு, மற்றும் சிறப்பு நடவடிக்கைக்கான விமானங்கள்தான். எனவே, F-35 விமானம் வாங்கப்பட்டால் அதற்காக தனியாக பயிற்சி தேவைப்படும். இவை 2080 வரை பயன்பாட்டில் இருக்கும். ஆனால் இந்த விமானம் வாங்குவது என்பது வெறும் பேச்சுவார்த்தை அளவில்தான் இருக்கிறது என பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் கூறியிருக்கிறார்.
தாங்கள் வைத்திருக்கும் 2470 F-35 விமானங்களை இயக்கவும் பராமரிக்கவும் தோராயமாக 2 டிரில்லியன் டாலர்கள் வரை செலவாகும் என அமெரிக்காவின் அரசாங்க அதிகாரிகள் கூறுகின்றனர். அப்படி இருக்கையில் நாம் 100 விமானங்களை வாங்குகிறோம் என்று வைத்துக்கொண்டால் அதற்காகும் செலவுகளை நம்மால் சமாளிக்க முடியுமா? என்பதும் கேள்வியாக இருக்கிறது.
ரஷ்ய விமனத்தின் கதை
இந்தியா கடந்த 2010ம் ஆண்டே 5ம் தலைமுறை போர் விமானங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டது. ரஷ்யாவுடன் Fifth Generation Fighter Aircraft - FGFA எனும் திட்டத்திலும் இணைந்திருந்தது. ஆனால், எதிர்பார்த்ததை விட அதிக செலவு ஏற்பட்டதாக கூறி கடந்த 2018ம் ஆண்டு இந்த திட்டத்திலிருந்து கழன்றுக்கொண்டது. மட்டுமல்லாது சுயமாக 5ம் தலைமுறை விமானங்களை உருவாக்கும் திட்டத்தையும் தொடங்கியது.
இந்தியாவின் நிலை
இந்திய விமானப்படை 42.5 போர் விமான படைகளை கொண்டிருக்க வேண்டும். 1 போர் படையில் 16-18 போர் விமானங்கள் இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவிடம் 31-32 போர் படைகள் மட்டுமே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஜாகுவார், மிக்-21 போன்ற பழைய விமானங்களை விமானப்படை விடுவித்து வருகிறது.
மறுபுறம் சீனா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. 5ம் தலைமுறையை தாண்டி 6ம் தலைமுறை விமானத்தை உருவாக்கி வருகிறது. மட்டுமல்லாது பாகிஸ்தானுக்கும் போர் விமானங்களை விற்க முன் வந்திருக்கிறது. இவை அனைத்தும் இந்தியாவுக்கு புதிய நெருக்கடிகளை உருவாக்கியுள்ளன.
சரி நமக்குதான் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) எனப்படும் சொந்த விமான தயாரிப்பு நிறுவனம் இருக்கிறதே! அதை வைத்து விமானங்களை உருவாக்க முடியாதா? என்று உங்களுக்கு தோன்றலாம். விஷயம் என்னவெனில், இந்த நிறுவனம் ஏற்கெனவே ஆர்டர் கொடுத்த 83 LCA-Mk1A விமானங்களை லேட்டாக டெலிவரி செய்துள்ளது. நமக்கு உடனடியாக 500 போர் விமானங்கள் தேவை. இதில் பாதிக்கும் மேல் லைட் காம்பாட் ஏர்கிராஃப்ட் (LCA) ஆக இருந்தால் போதும். ஆனால் அதைக்கூட சொன்ன தேதியில் HAL டெலிவரிக்கு கொடுக்காமல் தாமதித்து வருகிறது.
சரி இங்கு லேட் ஆனால் அமெரிக்காவிடம் F-35 வாங்கிக்கொள்ளலாம் என்று யோசிக்கலாம். அந்த விமானங்களை இன்று ஆட்டர் செய்தால் கூட வருவதற்கு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். உதாரணமாக ரஃபேல் விமானங்களை எடுத்துக்கொள்ளுங்கள். 2016ம் ஆண்டு ஆர்டர் செய்யப்பட்டது. ஆனால் சமீபத்தில்தான் நமது கைக்கு கிடைத்தது.
ஆக இந்த விஷயத்தில் இந்தியா என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications