கொரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை கூடாது.. இந்தியா கடும் முயற்சி.. பாக். ஆதரவு.. அமெரிக்கா எதிர்ப்பு
டெல்லி: இந்தியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட குறைந்த வருவாய் கொண்ட நாடுகள், கொரோனா தடுப்பூசியை, காப்புரிமை மற்றும் அறிவுசார் சொத்துரிமை பிரிவிலிருந்து நீக்கிவிட்டு, தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றன.
அறிவுசார் சொத்துரிமை பிரிவிலிருந்து கொரோனா மருந்துகள், தடுப்பூசிகள், பரிசோதனைகள் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பங்களை தற்காலிகமாக நீக்க வேண்டும் என்று இந்த நாடுகள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

1995ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட TRIPS (வணிகம்- அறிவுசார் சொத்துரிமை தொடர்பானது) ஒப்பந்தத்தின் சில பிரிவுகளின் கீழ் இந்த விலக்கு கேட்கப்படுகிறது.
உலக வர்த்தக அமைப்பிடம் அக்டோபர் 2ம் தேதி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன. இன்றைய தினம் உலக வர்த்தக நிறுவனத்திடம் இது தொடர்பான இறுதி கட்ட கோரிக்கைகளை இவ்விரு நாடுகளும் முன்வைக்கின்றன.
இவ்வாறு அறிவுசார் சொத்துரிமை இருந்து விலக்கு அளித்தால்தான், கொரோனா மருந்துகள், தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள் அனைத்து மக்களுக்கும் குறைந்த விலையில் சென்று சேரும் என்பது இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் வாதமாக இருக்கிறது. குறைந்த வருமானம் ஈட்டக்கூடிய நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு, அத்தியாவசிய மருந்து பொருட்கள் சப்ளை விவகாரங்களில் சில விதிமுறைகளை பயன்படுத்தி விலக்கு அளிக்கலாம் என்று 1995-ஆம் ஆண்டு போடப்பட்ட TRIPS ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சபரிமலையில் பரவும் கொரோனா - ஊழியர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடு
இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள், தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையில், உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள், கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை பெறும் வரை அறிவுசார் சொத்துரிமையிலிருந்து அது சார்ந்த மருந்துகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா மட்டுமின்றி, அர்ஜென்டினா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, துனிசியா, எகிப்து, இந்தோனேசியா, மொரிஷியஸ், மொசாம்பிக் மற்றும் நிகரகுவா ஆகிய நாடுகள் இந்த பரிந்துரையை முழுக்க ஆதரிக்கின்றன.
சாட், சீனா, சிலி, கொலம்பியா, கோஸ்டாரிகா, ஈக்வடார், எல் சால்வடோர், ஜமைக்கா, ஆப்பிரிக்கா, கரீபியன் மற்றும் பசிபிக் நாடுகள் பேச்சுவார்த்தைக் குழுக்களும், நைஜீரியா, பிலிப்பைன்ஸ், செனகல், துருக்கி மற்றும் தாய்லாந்து ஆகியவையும், இது குறித்து விவாதிக்க வலியுறுத்துகின்றன.
ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், நார்வே, சுவிட்சர்லாந்து, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அதேநேரம் உலக சுகாதார நிறுவனம் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
அக்டோபர் 16 ஆம் தேதி நடந்த TRIPS கவுன்சிலின் கூட்டத்தின் போது, கொரோனா நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான சுகாதாரப் பொருட்களின் போதுமான அல்லது உற்பத்தி திறன் இல்லாத நாடுகளுக்கு, பிற நாடுகளுடன் கூட்டுத் திட்டம் முக்கியமானது என்று இந்தியா தெரிவித்திருந்தது.
கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான மருத்துவ தயாரிப்புகள் மற்றும் உபகரணங்களை இந்தியா வழங்கியுள்ளதை அப்போது நமது நாடு சுட்டிக் காட்டியது. எதிர்ப்புகள் வந்தாலும், இந்தியா முனைப்போடு இந்த உதவிகளை செய்ததை இந்திய தரப்பு சுட்டிக் காட்டி பேசியது.
சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் அனைவருக்கும் சமமாக கிடைப்பதில், அறிவுசார் சொத்துரிமை ஒரு தடையாக இருப்பதால், இதிலிருந்து தற்காலிக விலக்கு அவசியம் என்பது இந்தியாவின் வாதமாகும்.