எவ்வளவு ட்ரோன் அனுப்பினாலும் நெருங்கவே முடியாது! பார்கவஸ்திரா "கில்லர்" ட்ரோன் அமைப்பு சோதனை வெற்றி
டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதல் சில நாட்களுக்கு முன்பு தான் முடிவுக்கு வந்தது. இந்தியா மீது நடத்தப்பட்ட ட்ரோன்களை காலி செய்ததில் நமது வான் பாதுகாப்பு அமைப்பிற்கு முக்கிய பங்கு இருக்கிறது. இதற்கிடையே இந்தியா இப்போது பார்கவஸ்திரா என்ற புதிய உள்நாட்டு ட்ரோன் தடுப்பு வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
இந்த காலத்தில் சண்டை முறை மொத்தமாக மாறிவிட்டது. ராணுவத்தை இறக்காமலேயே எதிரி நாட்டில் பெரும் அழிவை ஏற்படுத்த முடியும். அதில் ட்ரோன்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா பாகிஸ்தான் மோதல் சமயத்திலும் கூட ட்ரோன்களே அதிகம் பயன்படுத்தப்பட்டன.

வான் பாதுகாப்பு அமைப்பு
ட்ரோன்கள் மிகவும் வலிமையானதாக மாறி வரும் சூழலில், இதனால் ஒவ்வொரு நாடும் அதைத் தடுக்கும் வான் பாதுகாப்பு அமைப்பை வைத்திருப்பதும் அவசியமாகிறது. இந்தியாவிடம் ரஷ்யாவின் எஸ்400, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு எனப் பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
இதற்கிடையே பார்கவஸ்திரா எனப் பெயரிடப்பட்ட புதிய உள்நாட்டு ஆன்ட்டி ட்ரோன் அமைப்பை இந்தியா இன்று வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறைந்த செலவில் உற்பத்தி செய்யக்கூடியவை என்பதே இதன் சிறப்பம்சமாகும். ஒடிசாவின் கோபால்பூரில் உள்ள கடல்வழி பயரிங் ரேஞ்ச் மையத்தில் இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
உருவாக்கியது யார்
இதை சோலார் டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் லிமிடெட் (SDAL) என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. எதிரிகள் ட்ரோன்களை கூட்டமாக அனுப்பினாலும் அதைக் குறிவைத்து காலி செய்யும் வகையில் இந்த ட்ரோன் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மோதல் ஏற்படும்போது திடீரென மொத்தமாக ட்ரோன்களை அனுப்பும் போக்கு அதிகரித்து வருகிறது. இது ஒரு பெரிய அச்சுறுத்தலாகவும் உருவாகி வருகின்றன. இதனைப் பாதுகாப்பு வல்லுநர்கள் "ரிமோட் பொம்மைகள்" என்றும் குறிப்பிடுகிறார்கள். பொதுவாக இதுபோன்ற தாக்குதல்களில் பயன்படுத்தப்படும் ட்ரோன்களின் மதிப்பு குறைவானதாகவே இருக்கும். இதனால் மொத்தமாக ட்ரோன்களை அனுப்பும்போதும் செலவு பெரிதாக ஏற்படாது. அதேநேரம் பாதிப்பும் கணிசமாக ஏற்படும்.
அதிகரிக்கும் பயன்பாடு
ரஷ்யா-உக்ரைன் போரில் பொதுவாக இந்த யுக்தி பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இஸ்ரேல்- ஹமாஸ் மோதலிலும் கூட ஹமாஸ் தொடக்கத்தில் இதைப் பயன்படுத்தியது. மேலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தான் கூட இந்த முறையைப் பயன்படுத்தியே இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்றது. இருப்பினும், இந்தியப் படைகள் தகுந்த பதிலடி கொடுத்து.. எல்லைப் பகுதிகளை நோக்கி வந்த அனைத்து ட்ரோன்களையும் இந்தியா சூட்டு வீழ்த்தியிருந்தது.
ஏன் முக்கியம்
வான் பாதுகாப்பு அமைப்பில் இந்தியா மிக வலிமையாக இருப்பதையே இது காட்டுகிறது. இந்தச் சூழலில் தான் பாதுகாப்பு அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், பார்கவஸ்திரா உள்நாட்டு ஆன்ட்டி ட்ரோன் அமைப்பை இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இந்த சோதனையின் போது ஏவப்பட்ட அனைத்து ஏவுகணைகளையும் பார்கவஸ்திரா வெற்றிகரமாகத் தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்கவஸ்திரா என்பது எந்தவொரு ட்ரோனாக இருந்தாலும் அதைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட இந்த ட்ரோன் 2.5 கிலோமீட்டர் தொலைவில் வரும் சிறிய ட்ரோன்களைக் கண்டறிந்து அழிக்கும் மேம்பட்ட திறன்களைக் கொண்டுள்ளது. மூத்த ராணுவ வான் பாதுகாப்பு அதிகாரிகள் முன்னிலையில் மூன்று முறை இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டன












Click it and Unblock the Notifications