முடிவுக்கு வரும் இந்தியா-கனடா மோதல்? பி20 உச்சிமாநாட்டில் தீர்வாகும் பஞ்சாயத்து.. கசிந்த தகவல்
டெல்லி: கனடாவில் காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியா-கனடா உறவு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த மாதம் இந்தியாவில் நடைபெறும் பி20 உச்சி மாநாட்டில் இது குறித்து கனடாவுடன் பேசப்படும் என இந்தியா தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
கடந்த ஜூன் மாதம் 8ம் தேதியன்று கனடாவில் சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இவர் மீது இந்தியாவில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவர் காலிஸ்தான் விடுதலைக்கு செயல்பட்டதாகவும், காலிஸ்தான் புலிகள் படைக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி வழங்கியதாகவும் இந்திய உளவுத்துறை ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தது.

இது தவிர கடந்த 2007ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நடந்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் நிஜ்ஜார் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தார். இவர் கனடா குடியுரிமை பெற்ற அங்க வாழ்ந்து வந்ததால் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பஞ்சாப் காவல்துறை கனடாவுக்கு கோரிக்கை வைத்தது. ஆனால் கனடா அதை ஏற்க மறுத்துவிட்டது. மேலும், கனடாவிலிருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவாக செயல்படும் பிரிவினைவாத குழுக்களுக்கு எதிரான உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்த சூழலில்தான் அவர் கனடாவில் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து விசாரணையில் இறங்கிய கனடா உளவுத்துறை, இந்த கொலையில் இந்தியா சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியது. இதனை அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக கூறி விமர்சித்துள்ளார். இந்த கொலைக்கு பின்னால் இந்தியாவின் நடவடிக்கைகள் இருப்பதற்கான உறுதியான காரணங்கள் இருக்கின்றன என்றும், இது தொடர்பான இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகரிடம் கலந்துரையாடியுள்ளதாகவும் கூறியுள்ளார். சமீபத்தில் ஜி20 மாநாட்டில் இந்தியாவுக்கு வந்த ஜஸ்டின் ட்ரூடோ, இந்த கொலைக்கான ஆதாரங்களை பிரதமரிடம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
ஆனால் இது தொடர்பாக இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கனடா அரசு இந்திய நாட்டின் தூதரக அதிகாரி ஒருவரை கனடாவிலிருந்து வெளியேற்றி உத்தரவிட்டது. அதேபோல இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவில் இருக்கும் கனடா நாட்டின் தூதரக அதிகாரி ஒருவரை மத்திய அரசு வெளியேற்ற உத்தரவிட்டது. இது இரு நாடுகளுக்கும் இடையான நல்லுறவை கடுமையாக பாதித்தது. இந்த உறவை பழையபடி மீட்டெடுக்க இரு நாடுகள் தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இப்படி இருக்கையில், அடுத்த வாரம் டெல்லியில் நடைபெறும் பி20 உச்சி மாநாட்டின் போது கனடாவுடனான பிரச்சினைகளை இந்தியா விவாதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்டோபர் மாதம் 13 முதல் 14ம் தேதி வரை துவாரகாவில் உள்ள இந்தியா இன்டர்நேஷனல் கன்வென்ஷன் மற்றும் எக்ஸ்போ சென்டரான யஷோபூமியில் இந்தி பி20 மாநாடு நடைபெறுகிறது. இதில் 25 நாடுகளின் தலைமை அதிகாரிகளும், ஜி20 உறுப்பு நாடுகளின் நாடாளுமன்ற சபா நாயகர்களும் பங்கேற்கின்றனர். உலகம் முழுவதும் ஒரே பாராளுமன்றம் வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு இந்த பி20 மாநாடு, ஜி20 நாடுகளால் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் ஒன்பதாவது பி20 உச்சி மாநாடு இந்தியாவில் நடக்கிறது. இதில் கனடா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில் கனடா சார்பில் அந்நாட்டின் செனட் சபாநாயகர் ரேமண்ட் காக்னே பங்கேற்கிறார். இந்நிலையில் இந்தியா மீதான கனடாவின் குற்றச்சாட்டு குறித்து இதில் விவாதிக்கப்படுமா? என்று கேள்வியெழுப்பியதற்கு, "இந்த மாநாட்டில் ஏற்கெனவே பேச வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து விவாதிப்போம். மற்ற விவகாரங்கள் முறைசாரா முறையில் பேசப்படும்" என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார். எனவே இந்த பி20 உச்சி மாநாட்டின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications