2036 ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த விரும்புகிறோம்.. பிரதமர் மோடி அடுத்து சொன்ன மேட்டர்.. செம
டெல்லி: 2036இல் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா அனைத்து முயற்சிகளையும் செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
விளையாட்டுப் போட்டிகளைப் பொறுத்தவரை அதன் உட்சபட்சமாக ஒலிம்பிக் போட்டிகள் கருதப்படுகிறது. விளையாட்டு வீரர்கள் பலரும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்காகவே தங்கள் வாழ்நாள் முழுக்க தயாராவார்கள்.

கடந்த ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு தங்கம், இரண்டு தங்கம், மூன்று வெண்கலம் என 7 பதங்கங்கள் உடன் 48ஆவது இடத்தை பிடித்தது. இதற்கிடையே மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி 2036 ஒலிம்பிக் போட்டிகள் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
ஒலிம்பிக் போட்டிகள்: சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. இதில் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், 2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்தத் தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "2036இல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். இது 140 கோடி இந்தியர்களின் நீண்ட நாள் கனவு.. உங்கள் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுடன் இந்த கனவை நாங்கள் நனவாக்க விரும்புகிறோம்... சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஆதரவை இந்தியா பெறும் என்று நான் நம்புகிறேன்.
பிரதமர் மோடி: 2029 இளைஞர் ஒலிம்பிக்கை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஐஓசியிடம் இருந்து இந்தியாவுக்குத் தொடர்ந்து ஆதரவு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.. இந்தியாவில் அனைத்து பண்டிகைகளுமே விளையாட்டுகள் உடன் தொடர்பு கொண்டுள்ளது. விளையாட்டுகள் இல்லாத கொண்டாட்டங்களே இந்தியாவில் இல்லை என்று சொல்லலாம்.
கடைசியில் சொன்ன செம மேட்டர்: விளையாட்டைப் பொறுத்தவரை அதில் தோல்வி அடைவோர் இல்லை.. விளையாட்டில் வெற்றியாளர்களும் போட்டியில் இருந்து பாடம் கற்போர் மட்டுமே உள்ளனர். விளையாட்டு மனிதக் குலத்தை மேம்படுத்துகிறது. இதன் காரணமாகவே ஒவ்வொரு சாதனை முறியடிக்கப்படும் போதும் அனைவரும் பாராட்டுகிறோம். விளையாட்டு என்பது பதக்கங்களை வெல்வது மட்டுமில்லை. அது இதயங்களை வெல்வதும்தான்" என்று அவர் தெரிவித்தார்.
கிரிக்கெட் போட்டி: முன்னதாக 2028இல் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் போட்டியைச் சேர்ப்பது குறித்து கிட்டதட்ட இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அதிகாரப்பூர்வ முடிவுகள் திங்கள்கிழமை எடுக்கப்படும். அந்த தொடரில் போட்டிகள் டி20 முறையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இந்தியா இதுவரை ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியதே இல்லை. கடந்த 2010ஆம் ஆண்டில் காமன்வெல்த் போட்டிகளை மட்டுமே நடத்தி இருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகளைப் பொறுத்தவரைக் கடந்த முறை அது ஜப்பானில் நடைபெற்றது. 2024 ஒலிம்பிக் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடக்கும் நிலையில், 2028இல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரிலும், 2032 ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனிலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
2036 ஒலிம்பிக்: இந்தச் சூழலில் தான் 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. இதனைப் பிரதமர் மோடியும் இப்போது உறுதி செய்துள்ளார். ஒலிம்பிக் கமிட்டியில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் வாக்கு அளித்து அதன் அடிப்படையிலேயே ஒலிம்பிக் எங்கு நடைபெறும் என்பது முடிவு செய்யப்படும்.












Click it and Unblock the Notifications