"குழப்பும் ஜிபிஎஸ்.. புரியாமல் சுற்றும் இந்திய விமானங்கள்.." மத்திய கிழக்கில் பறக்கும் போது பகீர்
டெல்லி: மத்திய கிழக்கில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அங்கே பறக்கும் விமானங்களில் திடீரென கோளாறு ஏற்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காலத்தில் விமான போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் விமான பாதுகாப்பும் ரொம்பவே முக்கியமான ஒன்றாக இருக்கிறது. விமான பாதுகாப்பு என்று வரும் போது விமானத்தின் ஜிபிஎஸ், ரேடார் ஆகியவை ரொம்பவே முக்கியமானது.

விமானம் பறந்து கொண்டிருக்கும் போது அதன் பாதுகாப்பை இவை தான் உறுதி செய்கிறது. இதற்கிடையே அதில் முக்கிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரித்துள்ளது.
சிக்னல் பாதிப்பு: "மத்திய கிழக்குப் பகுதிகளில் சில சமயம் விமானங்கள் பயணிக்கும் போது, சிக்னல்கள் கட் ஆவதாகவும் இதனால் விமானம் எந்தவொரு டெக் உதவியும் இல்லாமல் பறக்க வேண்டி இருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரித்துள்ளது. சமீப காலங்களில் மத்திய கிழக்குப் பகுதிகளில் பறக்கும் போது இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது அங்கே பறக்கும் விமானங்களுக்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் எச்சரித்துள்ளனர்.
இதுபோன்ற நிலைமை ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் விமான நிறுவனங்களுக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இது குறித்து அவர்கள் இந்திய விமான நிறுவனங்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
சுற்றறிக்கை: அதில், "குளோபல் நேவிகேஷன் சேட்டிலைட் சிஸ்டத்தில் இடர்பாடுகள் ஏற்பட்டு, இதனால் விமானங்களில் சிக்கல் ஏற்படுகிறது. விமான நிறுவனங்கள் இதுபோன்ற சூழல் ஏற்படும் போது கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம், ஈரான் அருகே பறந்த போது பல விமானங்கள் இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளன. அப்போது ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலால் அவை வழிமாறி செல்லும் சூழல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதிலும் ஒரு விமானம் ஈரான் வான்வெளியில் அனுமதி இல்லாமல் கிட்டதட்ட நுழைந்துவிட்டது. நல்வாய்ப்பாகக் கடைசி நேரத்தில் விமானி திசையை மாற்றியதால் தேவையில்லாத பதற்றம் தவிர்க்கப்பட்டது. விமானிகள், விமான நிறுவனங்கள், விமான கட்டுப்பாடு குழு எனப் பலரும் இந்தப் பிரச்சினையை ஏற்கனவே எழுப்பியுள்ளனர்.
என்ன காரணம்: மத்திய கிழக்குப் பகுதியில் பறக்கும் போது விமானத்திற்குத் தவறான ஜிபிஎஸ் சிக்னல்கள் கிடைக்கின்றன. அவை விமானத்தில் இருக்கும் அமைப்பை ஏமாற்றும் வகையில் இருக்கிறது. செல்ல வேண்டிய ரூட்டில் இருந்து பல கிமீ தவறாகச் செல்வது போல அந்த ஜிபிஎஸ் சிக்னல் இருக்கிறது. இது சிக்னல் போலியானது என்று விமானத்தின் சிஸ்டம் கண்டுபிடிக்காத அளவுக்கு இது உண்மை போலவே இருப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படி குழப்பமான சிக்னல்கள் அடுத்தடுத்து வரும் நிலையில், அவை விமானத்தின் திசை கண்டறியும் அமைப்பை முற்றிலுமாக முடக்கிப் போடுகிறது. குறிப்பாக வடக்கு ஈராக் மற்றும் அஜர்பைஜானில் தான் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. செப்டம்பர் மாதம் வரையில் மட்டும் இதுபோல 10க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இதுவரை இதுபோல ஜிபிஎஸ் சிக்னல்களை குழப்புவது யார் என்று கண்டறியப்படவில்லை.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது அதை சமாளிக்க உரியத் திட்டத்தை வைத்திருக்குமாறு இந்திய விமான நிறுவனங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஜிபிஎஸ் சிக்னல்கள் மாறி மாறி வரும் போது அதைக் கண்காணிக்க அமைப்பை ஏற்படுத்துமாறும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications