பாஜகவினர் மீது நடவடிக்கை எடுத்தாச்சு.. இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு அறிக்கைக்கு இந்தியா கண்டனம்
டெல்லி: நபி நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்ட நிலையில், பிளவுபடுத்தும் நோக்கத்துடன் இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் புகழ்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

வழக்குப்பதிவு
நுபுர் ஷர்மாவின் இந்த கருத்து வட மாநிலங்களில் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மகாராஷ்டிராவில் நுபுர் ஷர்மா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நுபுர் ஷர்மாவின் பேச்சை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

கான்பூர் கலவரம்
அங்கு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் புகழ்பெற்ற பராத்தே என்ற சந்தையில் கடைகளை அடைக்க மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு பிரிவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இது தொடர்பாக 1,500 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

வளைகுடாவில் எதிர்ப்பு
இந்த நிலையில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
குவை, கத்தார், ஓமன் ஆகிய நாட்டு அரசுகள் இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தனர்.

கட்சியிலிருந்து நீக்கம்
இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிக்கையில், மத அடிப்படையில் இழிவுபடுத்துவது பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும், தங்கள் கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது எனவும் கூறினார். இதனை தொடர்ந்து சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்த நுபுர் ஷர்மா மற்றும் அக்கட்சியை சேர்ந்த நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டு உள்ளனர்.

இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு கண்டனம்
முஹம்மது நபி குறித்த நுபுர் சர்மாவின் அவதூறு பேச்சுக்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவினரின் இந்த கருத்தை கடுமையாக கண்டிப்பதாகவும் இந்தியாவில் இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமிய சின்னங்கள் குறிவைத்து தாக்கப்படுவதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டி இருந்தது
Recommended Video

இந்திய வெளியுறவுத்துறை
இந்த நிலையில் இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்புக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், பிளவுபடுத்தும் நோக்கத்துடன் இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications
