திருப்பம்!தாலிபான்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை.. ஆப்கன் துணைப் பிரதமரை சந்தித்த இந்திய உயர் அதிகாரி
டெல்லி: ஆப்கன் நிலை குறித்து ரஷ்யாவில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கச் சென்ற சிறப்புக் குழு, தாலிபான் அரசின் துணைப் பிரதமர் பிரதமர் அப்துல் சலாம் ஹனாபியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கனில் இருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறியதுமே அனைத்து விஷயங்களும் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. அஸ்ரப் கானி தலைமையிலான ஆப்கன் அரசு அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாகத் தாலிபான்கள் தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ளது. தாலிபான்கள் உடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாகச் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அறிவித்து வருகின்றனர்.

ரஷ்யாவில் பேச்சுவார்த்தை
அதேநேரம் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவும் தாலிபான்களை இன்னும் அங்கீகரிக்கவில்லை. இந்தியாவும் கூட இதுவரை தாலிபான்களை அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில் ஆப்கனில் அமைதியான சூழலை உருவாக்கும் வகையில் ரஷ்யா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆப்கன் நிலை குறித்து விவாதிக்க பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை ரஷ்யா ஏற்பாடு செய்திருந்தது. ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தை இந்தியா உட்பட 10 நாடுகள் பங்கேற்றிருந்தது.

முக்கிய மீட்டிங்
ரஷ்யாவின் அழைப்பைத் தொடர்ந்து இந்தியா சார்பில் சிறப்புக் குழு ஒன்று இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தது. அப்போது பாகிஸ்தான்- ஆப்கன்- ஈரான் நாடுகளுக்கான இந்திய இணைச் செயலாளர் ஜே.பி.சிங் தாலிபான் அரசின் துணைப் பிரதமர் பிரதமர் அப்துல் சலாம் ஹனாபியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆப்கனில் அமைதியான ஆட்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று இந்தியப் பிரதிநிதிகள் உறுதி அளித்தனர். மேலும் ஆப்கனுக்கு உதவிகளை வழங்க உள்ளதாக இந்தியா அறிவித்ததாகத் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

உதவிகளை அறிவித்த இந்தியா
ஆப்கனில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் தலைமையிலான ஆட்சி அமைந்தது. அதன் பிறகு ஆப்கனுக்கு இந்தியா உதவிகளை அறிவிப்பது இதுவே முதல்முறையாகும். இந்த சந்திப்பு குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதேநேரம் ரஷ்யாவில் இந்த சந்திப்பு நடந்தது உண்மை தான் என்றும் ஆப்கன் நாட்டிற்குக் கோதுமை உட்பட அத்தியாவசிய பொருட்களை அனுப்பி உதவுவது குறித்து இந்தியா ஆலோசனை செய்து வருவதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார்.

10 நாடுகள் கூட்டறிக்கை
மாஸ்கோவில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு 10 நாடுகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டன. இந்தியாவும் கையொப்பமிட்ட அந்த கூட்டறிக்கையில், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசைத் தாலிபான்கள் உருவாக்க வேண்டும் என்றும் போதைப் பொருளைக் கட்டுப்படுத்தவும் பயங்கரவாதிகள் ஒடுக்கவும் அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை மேம்படுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதிய யதார்த்தம்
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், "ஆப்கனில் அமைந்துள்ள தாலிபான் ஆட்சியைச் சர்வதேச நாடுகள் அங்கீகரிக்கிறதா இல்லையா என்பதைத் தாண்டி, அங்குள்ள புதிய யதார்த்தத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஆப்கானுக்குச் சர்வதேச நாடுகளின் உதவிகளைப் பெறும் நோக்கில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இந்த பேச்சுவார்த்தையை ரஷ்யா நடத்தி வருகிறது. இருப்பினும், இந்தக் கூட்டத்தில் அமெரிக்கா பங்கேற்கவில்லை.

2ஆவது பேச்சுவார்த்தை
தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் இருந்த இந்தியா, சமீப காலமாகத் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. இந்தியாவுக்கும் தாலிபான்களுக்கும் இடையே நடைபெறும் 2ஆவது பேச்சுவார்த்தை இதுவாகும். முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி தாலிபான் பிரதிநிதி கத்தாருக்கான இந்தியத் தூதர் தீபக் மிட்டலை தோஹாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications