பிரிக்ஸ் மூலம் அமெரிக்காவுக்கு ஆப்பு.. ரஷ்யாவை முழுமையாக பயன்படுத்த தொடங்கியது இந்தியா!
டெல்லி: அமெரிக்காவின் 50% வரி இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், நிலைமையை சமாளிக்க ரஷ்யாவுடன் அதிக அளவில் வர்த்தகத்தில் ஈடுபட மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. அதன்படி ரஷ்ய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து தொழில் தொடங்க மத்திய அரசு அழைப்பு விடுத்திருக்கிறது.
இந்தியா வந்திருக்கும் ரஷ்ய துணை பிரதமர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசியிருக்கிறார். இந்த பேச்சுவார்த்தையில் பல ஒப்பந்தங்கள் எட்டுவதற்கான சூழல் உருவாகியுள்ளது.

ரஷ்ய துணை பிரதமர்
இந்த சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் கூறுகையில், "இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு. இங்கு 'மேக் இன் இந்தியா' போன்ற முன்முயற்சிகள் வெளிநாட்டு வணிகங்களுக்கு புதிய வாய்ப்புகளைத் திறந்துள்ளது. இவை ரஷ்ய நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் அதிக அளவில் ஈடுபடுவதற்கு வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது.
4 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான ஜிடிபி கொண்ட இந்தியா, எதிர்காலத்தில் 7% வளர்ச்சி விகிதத்தை எதிர்பார்க்கிறது. வளர்ச்சிக்கு இந்தியாவுக்கு நம்பகமான இடங்களிலிருந்து பெரும் வளங்கள் தேவைப்படுகின்றன. அத்தியாவசியப் பொருட்கள், உரங்கள், ரசாயனங்கள் மற்றும் இயந்திரங்களின் தொடர்ச்சியான விநியோகம் இருந்தால் மட்டும்தான் நாம் முழு வளர்ச்சியை எட்ட முடியும்.
வர்த்தக பற்றாக்குறை
வேகமாக வளரும் உள்கட்டமைப்பு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வணிக வாய்ப்புகளை வழங்குகிறது. 'மேக் இன் இந்தியா' போன்ற திட்டங்கள் வெளிநாட்டு வணிகங்களுக்கு புதிய வழிகளைத் திறந்துள்ளன. இந்தியாவின் நவீனமயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் ஆகியவை நுகர்வு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் புதிய தேவைகளை உருவாக்குகின்றன. இந்த அம்சங்கள் அனைத்தும் ரஷ்ய நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் அதிக தீவிரமாக ஈடுபட ஒரு அழைப்பாகும். இந்த சவாலை எதிர்கொள்ள அவர்களை ஊக்குவிப்பதே எங்கள் முயற்சி.
வர்த்தகத்தில் சமநிலை
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு, முக்கிய நாடுகளுக்கு இடையே மிகவும் நிலையான உறவுகளில் ஒன்றாக இருப்பது தற்போது பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது பொருளாதார ஒத்துழைப்பாக மாறவில்லை. வர்த்தக பற்றாக்குறை உள்ளது.அதாவது ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவு அதிகமாகவும், இந்தியாவிலிருந்து அங்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் அளவு குறைவாகவும் இருக்கிறது.
வர்த்தகத்தில் சமநிலையை ஏற்படுத்த மத்திய அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், விரைவுபடுத்துவதிலும் இந்தியாவும் ரஷ்யாவும் உறுதியாக இருக்கிறது. அரசாங்கங்களாக நாங்கள் செய்ய விரும்புவது வழிகாட்டுதலை வழங்குவதும், பொருளாதார நடவடிக்கைகள் நடப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதும் ஆகும்" என்று கூறியிருக்கிறார்.
பிரிக்ஸ்
அமெரிக்காவின் டாலரை தவிர்ப்பதன் மூலம், டிரம்பின் வரி அச்சுறுத்தலை எதிர்கொள்ள முடியும். இந்தியாவுக்கும்-ரஷ்யாவுக்கும் இடையில் தற்போது தங்களது சொந்த கரன்சியில் வர்த்தகம் நடக்கிறது. எனவே இந்த வர்த்தகத்தை பலப்படுத்தி இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்திக்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. தவிர பிரிக்ஸ் அமைப்பில் உள்ள மற்ற நாடுகளுடனும் சொந்த கரன்சியில் வர்த்தகத்தில் ஈடுபட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
