வெளிநாட்டில் இருந்து மூட்டை மூட்டையாக.. தங்கத்தை இறக்குமதி செய்யும் இந்தியர்கள்.. ஏன்? பின்னணி
டெல்லி: இந்திய மக்கள் தங்கம் இறக்குமதி செய்வதை அதிகரித்து உள்ளனர். ரூபாய் மதிப்பு எப்போது வேண்டுமானாலும் ஈரான் போரால் சரியலாம் என்பதால் மக்கள் தங்கத்தை பாதுகாப்பான சொத்தாக கருதுகிறார்கள்.
இந்தியர்களின் தங்கம் மீதான மோகம் தீராதது என்பார்கள். ஆனால், இப்போது அந்த மோகம் நாட்டின் கஜானாவைக் கொஞ்சம் கவலைப்பட வைத்திருக்கிறது. கடந்த 2025-26 நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில், இந்தியாவின் தங்க இறக்குமதி சுமார் 28.73 சதவீதம் அதிகரித்து, 69 பில்லியன் டாலராக (சுமார் 5.7 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.

மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்தப் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில், தங்க இறக்குமதி 53.52 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
விலை உயர்வால் வந்த விபரீதம்?
தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் உச்சத்தைத் தொட்டு வருவதுதான் இந்த இறக்குமதி மதிப்பு உயர்வுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. தற்போது தலைநகர் டெல்லியில் 10 கிராம் தங்கம் (வரிகள் உட்பட) சுமார் 1,51,500 ரூபாய் என்ற மலைக்கவைக்கும் விலையில் விற்பனையாகிறது.
தங்கம் ஒரு பக்கம் இருக்க, வெள்ளியின் இறக்குமதியோ அசுர வேகத்தில் எகிறியுள்ளது. கடந்த 11 மாதங்களில் வெள்ளி இறக்குமதி 142.87 சதவீதம் அதிகரித்து 11.43 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் மற்றும் மருந்துத் துறைகளில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம்.
வர்த்தகப் பற்றாக்குறை எனும் தலைவலி
இந்தத் தங்க இறக்குமதி அதிகரிப்பால் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வித்தியாசம்) 310.60 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 261.80 பில்லியன் டாலராக இருந்தது.
யாரிடமிருந்து வாங்குகிறோம்?
சுவிட்சர்லாந்து: இந்தியாவின் மொத்த தங்க இறக்குமதியில் 40% பங்கு இவர்களுடையதுதான். பிப்ரவரி மாதத்தில் மட்டும் இங்கிருந்து தங்கம் இறக்குமதி செய்வது 719% அதிகரித்துள்ளது!
ஐக்கிய அரபு அமீரகம்: 16% பங்கு.
தென்னாப்பிரிக்கா: 10% பங்கு.
பொருளாதாரத்தின் நிலை என்ன?
சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய தங்கம் நுகரும் நாடாக இந்தியா உள்ளது. நகைத் தொழிலுக்காகவே பெரும்பாலும் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் இந்த அதீத இறக்குமதி, இந்தியாவின் 'நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை' (CAD) பாதிக்கும் அபாயம் உள்ளது.
ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, கடந்த டிசம்பர் காலாண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 13.2 பில்லியன் டாலராக (ஜிடிபியில் 1.3%) அதிகரித்துள்ளது.
அரசு போட்ட முட்டுக்கட்டை!
இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், அந்நியச் செலாவணி வெளியேறுவதைத் தவிர்க்கவும் மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கடந்த வாரமே தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் ஆகியவற்றால் செய்யப்பட்ட அனைத்து விதமான பொருட்களின் இறக்குமதிக்கும் மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கடுமையான நடவடிக்கை எல்லாம் இல்லை
இதற்கு எதிராக நடவடிக்கை எதுவும் ஆனால் எடுக்கப்படாது. தங்கம் ஒரு முதலீடுதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அது நாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டிப்படைக்கும் அளவுக்கு இறக்குமதி செய்யப்படுவது கவலைக்குரிய விஷயம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்!












Click it and Unblock the Notifications