‛‛ஆன்டி இந்தியன்ஸ்’’.. இந்தியாவுடன், கனடா மல்லுக்கட்டுவது ஏன்? பின்னணியை உடைத்த வெளியுறவுத்துறை
டெல்லி: கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இருந்த மோதல் போக்கின் நிலைமை தற்போது ஓரளவு சீரடைந்து வருகிறது. இந்நிலையில், கனடா மீது இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி சரமாரியான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்.
கனடாவில் சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் கொலை செய்யப்பட்டதிலிருந்து இந்தியா-கனடாவின் உறவு அவ்வளவு சுமூகமாக இருக்கவில்லை. ஹர்தீப் சிங் மீது இந்தியாவில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருந்தது. இவர் காலிஸ்தான் விடுதலைக்கு செயல்பட்டதாகவும், காலிஸ்தான் புலிகள் படைக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி வழங்கியதாகவும் இந்திய உளவுத்துறை ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தது.

இது தவிர கடந்த 2007ம் ஆண்டு பஞ்சாப்பின் லூதியானா நகரில் 6 பேர் கொலைக்கு காரணமாக வெடிகுண்டு தாக்குதலிலும் இவர் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். நாடு முழுவதும் போலீசும், புலனாய்வு அமைப்புகளும் இவரை சல்லடை போட்டு தேடிக்கொண்டிருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவில் இவர் குடியேறினார். கொஞ்ச காலத்தில் கனடா குடியுரிமையும் இவருக்கு கிடைத்துவிட்டது. ஆனாலும் இவரை விடாது துரத்தி, தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என கனடாவுக்கு கோரிக்கை வைத்தது பஞ்சாப் போலீஸ். கனடா இந்த கோரிக்கைக்கு அசைந்துகூட கொடுக்கவில்லை.
இது நிஜ்ஜாருக்கு தோதாக அமைந்துவிட மேலும் பல குற்ற செயல்களில் ஈடுபட தொடங்கினார். இப்படி இருக்கையில்தான் தங்கள் நாட்டுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவாக செயல்படும் பிரிவினைவாத குழுக்களுக்கு எதிரான உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என களத்தில் இறங்கியது இந்தியா. இந்தியா கேட்க, கனடா மௌனம் சாதிக்க நாட்கள் சென்றுக்கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக அவர் கனடாவிலேயே அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இது குறித்து விசாரணையில் இறங்கிய கனடா உளவுத்துறை, இந்த கொலையில் இந்தியா சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியது. இதனை அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக கூறி விமர்சித்துள்ளார். இந்த கொலைக்கு பின்னால் இந்தியாவின் நடவடிக்கைகள் இருப்பதற்கான உறுதியான காரணங்கள் இருக்கின்றன என்றும், இது தொடர்பான இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகரிடம் கலந்துரையாடியுள்ளதாகவும் ட்ரூடோ கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இத்துடன் நின்றுவிடாமல் கனடாவிலிருந்து இந்திய தூதர் ஒருவரையும் அவரது அரசு வெளியேற்றியது. அவ்வளவுதான், காதும் காதும் வைத்ததை போல முடிக்க வேண்டிய விஷயத்தை ஊதி பெரியதாக்கியது மட்டுமல்லாது, தங்கள் நாட்டின் அதிகாரியையே வெளியேற்றிவிட்டாயா? என கண் சிவந்தது இந்தியா. பதிலுக்கு கனடாவின் தூதரக உயர் அதிகாரி ஒருவரையும் இங்கிருந்து இந்தியா வெளியேற்றியது. அத்துடன் நின்றுவிடாமல் 41 தூதரக அதிகாரிகளையும் தொடர்ச்சியாக கனடாவுக்கு திருப்பி அனுப்பியது. மோதல் இப்படியாக நீடிக்க அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைய வழங்கப்படும் விசாவை ரத்து செய்தது இந்திய தூதரகம்.
இந்த சம்பவமெல்லாம் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. கடந்த சில நாட்களாக இரு நாடுகளும் தங்கள் உறவை மீட்டெடுக்க சமாதான நிலைக்கு வந்தன. இப்படி இருக்கையில், கனடா மீது இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி சரமாரியான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். அதாவது,
"பிரிவினைவாதிகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு கனடா இடம் அளிக்கிறது. இதுதான் இரு நாட்டின் உறவில் இருக்கும் பிரச்னை. அந்நாட்டில் வழங்கப்படும் பேச்சு, கருத்து சுதந்திரத்தை சிலர் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்துகின்றனர். இவர்கள் மீது அந்நாட்டு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்" என்று டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்திக்கும் போது கூறியுள்ளார். இவரது கருத்து, இரு நாட்டு உறவு குறித்த சலசலப்புகளை மேலும் எழுப்பியிருக்கிறது.












Click it and Unblock the Notifications