"ரூ.10,000 இழப்பீடு தருகிறோம்.." இண்டிகோ வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு.. ஆனால் ஒரு ட்விஸ்ட்
டெல்லி: கடந்த வாரம் இண்டிகோ விமானச் சேவை நாடு முழுக்க கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் நாட்டில் பல்வேறு நகரங்களில் பல ஆயிரம் பயணிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே இண்டிகோ சேவையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.10 ஆயிரம் டிக்கெட் வவுச்சர்களை கூடுதல் இழப்பீடாக வழங்குவதாக இண்டிகோ அறிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி விமானச் சேவை நிறுவனமாக இருக்கும் இண்டிகோ நிறுவனத்தின் விமானச் சேவை கடந்த வாரம் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாகக் கடந்த 3 முதல் 5 ஆம் தேதி வரை விமானச் சேவை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. அந்த நாடுகளில் மட்டும் 1000+ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை உட்படப் பல நகரங்களில் பாதிப்பு கடுமையாக இருந்தது.

இண்டிகோ
இப்போது தான் எல்லா பிரச்சனையும் மெல்லச் சீராகி வருகிறது. ரத்து செய்யப்படும் விமானங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் இண்டிகோவில் பயணித்தோருக்கு ரீபண்ட் தரப்பட்டுள்ளது. இருப்பினும், சிவில் விமானப் போக்குவரத்து வழிகாட்டுதல்கள் கீழ் விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டால்.. பயணிகளுக்குத் தலா ரூ.10,000 இழப்பீடு தரப்பட வேண்டும். இதுவரை இழப்பீடு குறித்து எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் இருந்தது. இந்த பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தலா 10,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என இண்டிகோ அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மேலும், "கடந்த டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் இண்டிகோ நிறுவனத்தில் டிக்கெட் புக் செய்த வாடிக்கையாளர்களில் ஒரு பகுதியினர் விமான நிலையங்களில் பல மணி நேரம் சிக்கித் தவித்தனர். கூட்ட நெரிசலால் பலர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அப்படிக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு 10,000 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட் வவுச்சர்களை வழங்குவோம். இதை அடுத்த 12 மாதங்களுக்கு இண்டிகோ விமானப் பயணங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்" எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஒரு சிக்கல்
இண்டிகோ தனது அறிவிப்பில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பயணிகள் எனக் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், "கடுமையாகப் பாதிக்கப்பட்ட" என்பதை எப்படி வரையறுக்கிறார்கள் என்பதை விளக்கவில்லை. இதனால் பயணிகள் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். முன்பே குறிப்பிட்டது போல விமானம் புறப்படும் நேரத்திற்கு 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்யப்பட்ட அரசு வழிகாட்டுதலின்படி 5,000 முதல் 10,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அந்த இழப்பீடு தொகை தனி என்றும் இது கூடுதல் இழப்பீடு என்றும் இண்டிகோ தனது அறிவிப்பில் கூறியுள்ளது.
மோசமான பாதிப்பு
கடந்த வாரம் இண்டிகோ சேவை மோசமாகப் பாதிக்கப்பட்டு இருந்தது. சென்னையில் கூட ஓரிரு நாட்கள் விமான சேவை மொத்தமாகவே ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசும் தலையிட வேண்டி இருந்தது. 10% வரையிலான விமான சேவைகளைக் குறைக்க மத்திய அரசு இண்டிகோவுக்கு உத்தரவிட்டது. மேலும், ரீபண்ட் தொகைகளையும் உடனடியாகத் திரும்பத் தர உத்தரவிட்டது. அதன்படி இண்டிகோவும் ரீபண்ட்களை கொடுக்க ஆரம்பித்தது. எல்லாப் பயணிகளுக்கும் ரீபண்ட் தரப்பட்டதாக இண்டிகோ தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் தான் இப்போது கூடுதல் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமை சீரானதாகத் தகவல்
மேலும், தனது விமானச் சேவை சீரடைந்துவிட்டதாக இண்டிகோ மற்றொரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இப்போது 138 நகரங்களுக்கு இடையே தடையில்லாத சேவையை வழங்கி வருவதாகவும் ஆன்-டைம் செயல்பாடுகளை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தக் குழப்பத்திற்கு இண்டிகோவே காரணம் என பல்வேறு தரப்பினரும் சொல்கிறார்கள். அதாவது மத்திய அரசு பைலட் மற்றும் விமானக் குழுவினருக்குப் புதிய விதிகளை அறிவித்திருந்தது. இருப்பினும், அதை இண்டிகோ முறையாகச் செயல்படுத்தத் தவறியதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications