எங்க தாவூத் இப்ராஹிம் மாமா பாகிஸ்தானில்தான் பதுங்கி இருக்கிறார்- போட்டுக் கொடுத்த சகோதரி மகன்!
டெல்லி: இந்தியாவை உலுக்கிய பல நூறு பேரை படுகொலை செய்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் மூளையான நிழல் உலக பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதை உறுதி செய்துள்ளார் அவரது உறவினர். அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையிலேயே தாவூத் பதுங்கி இருக்கும் இடம் தெரியவந்துள்ளது.
Recommended Video
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் வன்முறைகள் வெடித்தன. இதன் ஒரு பகுதியாக 1993-ம் ஆண்டு நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இத்தாக்குதல்களில் மொத்தம் 257 பேர் பலியாகினர். 700க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

சர்வதேச பயங்கரவாதி
நாட்டையே உலுக்கிய, பொருளாதார கட்டமைப்பில் நாசத்தை ஏற்படுத்திய மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு மூளையாக இருந்தது தாவூத் இப்ராஹிம் எனும் நிழல் உலக தாதா. மும்பை நிழல் உலக தாதாவாக வலம் வந்து பின்னர் சர்வதேச பயங்கரவாதியாக உருவெடுத்தவர் தாவூத் இப்ராஹிம். ஐ.நா. அமைப்பால் தேடப்படுகிற சர்வதேச பயங்கரவாதி தாவூத்.

தாவூத்துடன் தொடர்பு
தாவூத் இப்ராஹிம் இந்தியாவை விட்டு தப்பி ஓடி வெளிநாட்டில் பதுங்கி இருந்தாலும் இன்னமும் அவரது நெட்வொர்க் கும்பல் இயங்கியே வருகிறது. தாவூத் இப்ராஹிமின் சொத்துகள் ஏலம்விடப்பட்ட போதும் தாவூத் இப்ராஹிமுடன் அவரது உறவினர்கள் தொடர்பில்தான் இருந்து வருகின்றனர் என்பது புலனாய்வு அதிகாரிகள் தகவல்.

மகாராஷ்டிரா அரசியல்
தாவூத் இப்ராஹிமும் அவரது நிழல் உலக தாதாக்களும் மகாராஷ்டிரா அரசியலில் எப்போதும் பேசுபொருள்தான். அண்மையில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும் மகாராஷ்டிரா அமைச்சருமான நவாப் மாலிக் கைது செய்யப்பட்டார். தாவூத் இப்ராஹிம் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக அவர் கைது செய்யப்பட்டார். இதன்பின்னர் மும்பையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தாவூத்திடம் இருந்து பணம்
இச்சோதனையின் போது தாவூப் இப்ராஹிமிடம் இருந்து அவரது சகோதரி குடும்பத்தினர் தொடர்ந்து பணம் பெற்று வருவதையும் கண்டுபிடித்தனர் அதிகாரிகள். இதனையடுத்து தாவூத்தின் சகோதரி குடும்பம் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டது. தாவூத் இப்ராஹிமின் சகோதரி மகன், அலிஷா பாரிகரிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கராச்சியில் பதுங்கல்
அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் அலிஷா பாரிகர் கூறியதாவது: நான் பிறப்பதற்கு முன்னரே தாவூத் இப்ராஹிம் மாமா இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டார். தெற்கு மும்பையில் தம்பர்வாலா குடியிருப்பில் 4-வது மாடியில்தான் தாவூத் மாமா குடியிருந்தார் என வீட்டில் சொல்வார்கள். தாவூத் இப்ராஹிம் மாமா பாகிஸ்தானின் கராச்சியில்தான் இருக்கிறார் என என்னுடைய பல உறவினர்கள் சொல்லி இருக்கின்றனர். ரம்ஜான், தீபாவளி காலங்களில் என்னுடைய அத்தை (தாவூத் இப்ராஹிம் மனைவி) எங்களுடன் பேசுவார். என் மனைவி, என் சகோதரிகளுடனும் அவர் பேசுவார். இவ்வாறு அலிஷா பாரிகர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications