கடும் நஷ்டம்! பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு.. இந்தியாவில் வரும் நாட்களில் நிலைமை எப்படி இருக்கும்?
டெல்லி: நாட்டில் சில பகுதிகளில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இது மற்ற மாநிலங்களுக்கும் பரவுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
நாட்டில் 26ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சுமார் ஒரு மாதமாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லாமல் இருக்கும் நிலையில், இது எண்ணெய் நிறுவனங்களுக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

நஷ்டம்
இதன் காரணமாகத் தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தும் உள்நாட்டு விற்பனையைக் குறைத்துவிட்டு, லாபகரமான ஏற்றுமதி சந்தையை நோக்கித் திரும்பி உள்ளன. உள்ளூர் சந்தையில் பெட்ரோல், டீசல் விற்பனையில் தனியார் நிறுவனங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கும், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் சில இடங்களில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள்
குறிப்பாக இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மூலம் இயக்கப்படும் பம்புகளில் பற்றாக்குறை நிலவுகிறது. அதேபோல ரிலையன்ஸ் நயாரா போன்ற தனியார் நிறுவனங்களின் பம்புகளிலும் கடுமையான எரிபொருள் பற்றாக்குறையை ஏற்பட்டுள்ளன.நாட்டின் மிகப்பெரிய எரிபொருள் சில்லறை விற்பனையாளராக இருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனிடம் இன்னும் கையிருப்புகள் உள்ளன.

மூன்று நிறுவனங்கள்
அறுவடைக் காலம் வந்துவிட்டதால் கிராமப் புறங்களில் இருக்கும் விவாசாயிகள் டீசலை பெற பெட்ரோல் பம்புகளுக்கு தான் படையெடுக்கிறார்கள். இருப்பினும், சில இடங்களில் பற்றாக்குறையே தொடர்கிறது. நாட்டில் IOC, BPCL மற்றும் HPCL ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் எரிபொருள் வர்த்தகத்தில் ஏகபோக உரிமையைப் பெற்றுள்ளன. நாட்டின் சில்லறை வர்த்தகத்தில் சுமார் 90% இந்த 3 நிறுவனங்களிடம் இருந்து தான் வருகிறது. சொல்லப்போனால் இந்த மூன்று நிறுவனங்கள் தான் விலையைக் கட்டுப்படுத்துகிறது.

நஷ்டம்
சுத்திகரிப்பு நிறுவனங்கள் விலையை தாங்களாகவே நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற போதிலும், இந்த 3 அரசு நிறுவனங்களின் சந்தை இருப்பு காரணமாகத் தனியார் நிறுவனங்களால் விலையை மாற்ற முடிவதில்லை. இதனால் ஒரு லிட்டர்பெட்ரோலுக்கு 19.7 ரூபாயும் டீசலுக்கு 31.9 ரூபாயும் வருமான இழப்பு ஏற்படுகிறது. எந்தவொரு தனியார் நிறுவனங்களாலும் இந்தளவுக்கு நஷ்டத்தை எதிர்கொள்ள முடியாது என்பதாலேயே அவர்கள் சில்லறை விற்பனையைக் குறைத்துள்ளன.

நடவடிக்கை
இதனால் நஷ்டத்தைக் குறைக்க அரசு நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன. டிப்போவில் இருந்து பம்ப்களுக்கு எரிபொருளின் விநியோக நேரத்தைக் குறைப்பது; டீசலர்களுக்கு கடனில் எரிபொருளை மறுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தற்போது தேவைக்கு 50% எரிபொருள் மட்டுமே சப்ளே செய்யப்படுகிறது என்றும் இதனால் இரவு 9 மணிக்கே பலரும் பம்புகளை மூட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தட்டுப்பாடு
மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 4900 பம்புகள் உள்ள நிலையில், அவற்றில் குறைந்தது 1000 பம்புகளில் தட்டுப்பாடு நிலவுகிறது. பல இடங்களில் எரிபொருள் நிரப்ப மக்கள் திரள்வதால் பாதுகாப்பிற்கு போலீசாரை அழைக்கும் நிகழ்வுகளும் தொடர்கிறது. கடந்த ஒரு வாரமாகவே பல டீலர்களால் எரிபொருளைப் பெற முடியவில்லை. வரும் நாட்களிலும் இந்த நிலைமை தொடர்ந்தால் அது பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்றே அஞ்சப்படுகிறது.

மறுப்பு
இருப்பினும், இதை அரசு வட்டாரங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளன. நாட்டில் எந்தவொரு எரிபொருள் பற்றாக்குறையும் ஏற்படவில்லை என்றும் நாட்டின் சில இடங்களில் ஏற்பட்ட பற்றாக்குறையே இதற்குக் காரணம் என்று விளக்கப்பட்டுள்ளது. இது விநியோக சங்கிலியில் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள பிரச்சினை என்றும் இது மிக விரைவில் தீர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications