Indore: இந்தியாவின் தூய்மையான நகரத்திற்கே இந்த நிலைமையா? கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 10 பேர் உயிரிழப்பு
டெல்லி: இந்தியாவின் தூய்மையான நகரங்களில் ஒன்றாக கடந்த 8 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ள இந்தூரில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தூய்மையான நகரமான இந்தூரில் குடிநீரில் கழிவு நீர் கலந்து அதனை அருந்திய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 மாத பச்சிளம் குழந்தை உள்பட 10 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தூய்மையான நகரங்களில் கடந்த 8 ஆண்டுகளாக முதலிடம் பிடிக்கும் நகரம் இந்தூர். மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகரான இந்தூர், தொடர்ந்து தூய்மையான நகரம் லிஸ்டில் முதலிடம் பிடித்து வரும் நிலையில், அதிர்ச்சிகரமான நிகழ்வு அங்கு நடைபெற்றுள்ளது.

10 பேர் உயிரிழப்பு
அதாவது, கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்து 10 பேர் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரில் உள்ள பகிராத்பூரா பகுதியில் குடிநீருடன் கழிவு நீர் கலந்துள்ளது. இதைக் குடித்த ஆயிரக்கணக்கானோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு தீவிர உடல்நலக்குறைவு ஏற்பட்டது .உடனடியாக பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி தற்போது வரை 10 பேர் பலியாகியுள்ளனர்.
பலியானவர்களில் 6 மாத பச்சிளம் குழந்தை, ஆறு பெண்களும் அடங்குவர். கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பெறுவோரில் சிலரின் உடல்நிலை மோசமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரும் எனவும் அஞ்சப்படுகிறது.
கழிவுநீர் குடிநீருடன் கலந்ததால்
நகராட்சி வழங்கிய குடிநீரை குடித்ததால்தான் இந்த உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருக்கக்கூடிய சூழலில், பலி எண்ணிக்கை தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவலை தற்போது வரை அதிகாரிகள் வழங்கவில்லை. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பிரதான குடிநீர் பைப்லைனுக்கு மேல்பகுதியில் டாய்லட் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டாய பாதுகாப்பு டேங்க் இன்றி இந்த கழிவு நீர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர், குடிநீருடன் கலந்ததே இந்த துயர நிகழ்வுக்கு காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்தூர் நகராட்சி ஆணையர் திலிப் குமார் கூறுகையில், "பகிராதபுராவுக்கு செல்லும் மெயின் பைப்லைனில் கசிவு கண்டறியப்பட்டுள்ளது.
40 ஆயிரம் பேர் பரிசோதனை
இதற்கு மேல் பகுதியில் டாய்லட் கட்டப்பட்டுள்ளது. இதுவே, குடிநீர் அசுத்தமாவதற்கான காரணமாக இருக்கும். டாய்லட்டில் இருந்து வெளியேறும் கழிவு நேரடியாக குடீநீர் பைப் லைனுக்கு மேலே உள்ள குழிக்குள் செலுத்தப்பட்டுள்ளது. கீழே இருக்கும் பைப்லைனில் கசிவு ஏற்பட்டதில், குடிநீருடன் கழிவு நீர் கலந்து இருக்கலாம்" என்று தெரிவித்தனர்.
பகிரதபுரா என்ற இடம் இந்தூரின்-1 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடமாகும். இந்த தொகுதி எம்.எல்.ஏவாக மத்திய பிரதேச அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா உள்ளார். இவர்தான் நகர்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி அமைச்சராவார். குடிநீருடன் கழிவு நீர் கலந்த விவகாரம் தொடர்பாக மத்திய பிரதேச பாஜக முதல்வர் மோகன் யாத்வ் கூறுகையில், பகிரதபுராவில் வசிக்க கூடிய 40 ஆயிரம் பேர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.
212 பேர் மருத்துவமனையில் அனுமதி
2,456 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு 212 பேர் நோயாளிகளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 50 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 162 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். பலரின் உடல் நிலை சீராக உள்ளது" என்றார்.
இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த அமைச்சர் விஜய் வர்கியாவிடம், குடிநீர் மாசுபாடு விவகாரத்தில், இளநிலை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர், மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? என்று கேள்வி எழுப்பினர். இதனால் கோபமான விஜய் வர்கியா, ‛அதை விடுங்கள்.. தேவையில்லாத கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள்'' என காட்டமாக பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications