கொஞ்சம் மிஸ்ஸானாலும் இந்தியாவுக்கு பேரிழப்பு.. சீனா, பாகிஸ்தானுக்கு லாபம்! இஸ்ரேல்-ஈரான் மோதலால் வினோத சிக்கல்
டெல்லி: இஸ்ரேல் ஈரான் இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மோதல் இப்போதைக்கு முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை. ஆனால், இந்த விவகாரம் எப்படிப் போனாலும் இந்தியாவுக்கு இதனால் பெரிய இழப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த சில நாட்களாக இஸ்ரேல் ஈரான் நாடுகள் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இரு நாடுகளுமே இப்போதைக்கு மோதலை முடிப்பது போலத் தெரியவில்லை. இந்த விவகாரத்தில் உலகின் பல நாடுகள் ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக்கூடாது என்றே கூறி வருகிறது.

இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்தியா ஏன் இதுபோல நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதன் பின்னணி என்ன.. இந்தியா இப்படியொரு முடிவை எடுக்க என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சபஹார் துறைமுக செயல்பாடுகள்
இந்த போர் காரணமாக சபஹார் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டால் அது இந்தியாவுக்கு மிகப் பெரிய இழப்பாக மாறும். மேலும், அது பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு லாபமாக மாறும். இந்த சபஹார் துறைமுகத்தில் உள்ள ஷாஹித் பெஹிஷ்டி டெர்மினலை மேம்படுத்த இந்தியா சுமார் 1000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் அங்குச் சரக்கு செயல்பாடுகள் எளிமையாகும். இதற்குப் பதிலாக அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இந்த டெர்மினல் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும். இது இந்தியாவுக்கு மிக முக்கியமான ஒரு திட்டமாகும்.
ஏன் முக்கியம்
ஆப்கானிஸ்தானுக்கும் மத்திய ஆசியாவிற்கும் இந்தியாவுக்கான வழியை சபஹார் துறைமுகம் அமைக்கிறது. இதன் மூலம் பாகிஸ்தானின் உதவி இல்லாமல் இந்தியாவால் எளிதாகச் சரக்குகளை அனுப்ப முடியும். அதாவது இப்போது இந்தியச் சரக்குகளைப் பாகிஸ்தானில் எடுத்துச் செல்ல முடியாது. இதனால் இதர ஆசிய, மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சரக்குகளை எடுத்துச் செல்வதில் சிக்கல் இருக்கும். ஆனால், சபஹார் துறைமுகம் இந்திய கண்ட்ரோலில் இருப்பது ஆப்கான் உட்பட மத்திய ஆசியா நாடுகளுக்கு எளிதாகச் சரக்குகளை அனுப்ப உதவும்.
இந்தியா இந்த துறைமுகத்தை இயக்கி வருவதால் இங்கு வரும் கண்டெய்னர் கப்பல்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. மேலும், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் கீழ் சீனாவால் உருவாக்கப்பட்ட பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தைப் போட்டியாக இந்த துறைமுகம் இருக்கும். ஆனால், இப்போது இந்த மோதலால் ஈரான் மீது மேற்குலக நாடுகள் கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்கலாம்.
சிக்கல் வரலாம்
கடந்த காலங்களில் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளில் இந்த துறைமுகத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது நிலைமை மோசமாகி வருவதால் இந்த துறைமுகத்தின் செயல்பாடுகளுக்கும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம். இது இந்தியாவுக்கு மிகப் பெரிய பின்னடைவையே ஏற்படுத்தும்.
இதுவும் முக்கியம்
அடுத்து இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார காரிடார்.. இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஜோர்டான், இஸ்ரேல் வழியாக ஐரோப்பாவுக்கான பொருளாதார வழித்தடம் கடந்த 2023இல் ஜி20 மாநாட்டின்போது அறிவிக்கப்பட்டது. சவுதி அரேபியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் இதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளன.
சீனாவின் "தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ்' திட்டத்திற்கு இது ஒரு பின்னடைவாக இருக்கும் என்பதால் அமெரிக்காவின் ஆதரவும் உள்ளது. இந்தியச் சரக்கு ஏற்றுமதிக்கான கட்டணத்தை 30 சதவீதம் இந்த பாதை குறைக்கும்.. மேலும் பயண நேரத்தையும் 40 சதவீதம் வரை குறைக்கும் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருந்தது.
இந்தியாவின் நிலைப்பாடு
ஆனால் புதிய போர் இந்த இரண்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இரு நாடுகளுமே இந்தியாவின் முக்கியமான நட்பு நாடுகளாக உள்ளன. பாகிஸ்தானுடனான இந்தியாவின் மோதலின் போது இஸ்ரேல் இந்தியாவை ஆதரித்தது.. ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் நீண்ட கால உறவு இருந்தாலும் கூட ஈரான் நடுநிலையான நிலைப்பாட்டையே எடுத்தது.
இதனால் இந்தியா இக்கட்டான சூழலில் இருக்கிறது. தற்போதைய மோதலில் இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் நிலைப்பாடு கொஞ்சம் மிஸ்ஸானாலும் கூட அது இரண்டு திட்டங்களையும் பாதிக்கலாம். இஸ்ரேல் ஈரானில் ஒரு நாட்டிற்கு ஆதரவளித்தால் மற்றொரு திட்டம் நிச்சயம் பாதிப்பை எதிர்கொள்ளும் என்பதால் இந்தியா பார்த்துப் பார்த்தே ஒவ்வொரு நடவடிக்கையையும் எடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications