வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கால அவசாகம் நீடிப்பு! ITR ஃபைல் செய்ய தேவையான ஆவணங்கள் என்ன!
டெல்லி: ஐடிஆர் எனப்படும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய இரண்டு மாதங்களுக்கு மேல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யத் தேவையான ஆவணங்கள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
2024-25 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜூலை 31ஆக இருந்த நிலையில், அது செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கணக்குகளை ஆடிட் செய்யத் தேவையில்லாத ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் சம்பளதாரர்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யத் தேவையான ஆவணங்கள்
வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கு முன், வரி செலுத்துவோர் சில ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, விண்ணப்பப் படிவும் 16 (Form-16), கேபிட்டல் கேயின் அறிக்கை (Capital Gains Statement), டிடிஎஸ் சான்றிதழ்கள் (TDS) , பான் கார்டு (PAN card), ஆதார் கார்டு (Aadhar card) போன்றவற்றைத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பழைய வரி முறையைத் தேர்ந்தெடுத்திருந்தால், வீட்டு வாடகை அலவுன்ஸ் (HRA) விலக்கு பெற வாடகை ஒப்பந்தம் மற்றும் வாடகை ரசீதுகளை வைத்திருக்க வேண்டும்.
ஃபார்ம் 16 கட்டாயமா?
வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கு ஃபார்ம்-16 மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். ஏனெனில், இது நீங்கள் சம்பளமாகப் பெறும் தொகை, பிடித்தங்கள் குறித்த விவரங்களை வழங்குகிறது. அந்த நிதியாண்டில் நீங்கள் வேலை மாறினால், இரண்டு நிறுவனங்களிடம் இருந்தும் Form-16ஐப் பெற வேண்டும்.
அதேநேரம் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய இந்த ஆவணம் கட்டாயமில்லை. இருப்பினும் ஃபார்ம் 16 இருந்தால் வருமான வரிக் கணக்குத் தாக்கல் ஈஸியாக முடிந்துவிடும். Form-16இல் இரண்டு பகுதிகள் உள்ளன. பகுதி A உங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட TDS விவரங்களையும், பகுதி B உங்கள் வருமானம் மற்றும் இதர பிடித்தங்களின் விவரங்களையும் வழங்குகிறது.
மூலதன ஆதாய அறிக்கையின் முக்கியத்துவம்
பங்குச் சந்தை , மியூச்சுவல் ஃபண்டுகள் உள்ளிட்டவற்றை நீங்கள் விற்றிருந்தால், அந்தச் சொத்துக்களை விற்றதன் மூலம் நீங்கள் பெற்ற மூலதன ஆதாயத்தைத் தெரிவிக்க வேண்டும். உங்கள் பங்குச்சந்தை புரோக்கர் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடமிருந்து இந்த மூலதன ஆதாய அறிக்கையை நீங்கள் பெறலாம். உங்கள் மூலதன ஆதாயங்கள் குறுகிய காலமா (பங்குச்சந்தையில் 12 மாதங்களுக்குக் குறைவாகப் பங்குகளை விற்றால்) அல்லது நீண்ட காலமா (12 மாதங்களுக்கு மேல் வைத்திருந்து விற்றால்) என்பதை இந்த அறிக்கை உங்களுக்குத் தெரிவிக்கும். அதற்கேற்ப நீங்கள் வரி செலுத்த வேண்டும்.
வருடாந்திர தகவல் அறிக்கை (AIS) என்றால் என்ன?
வருடாந்திரத் தகவல் அறிக்கை இதை ஆங்கிலத்தில் Annual Information Statement - AIS என குறிப்பிடுவார்கள். இது வரி செலுத்துவோர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் போது வைத்திருக்க வேண்டிய கட்டாய ஆவணமாகும். AISல் ஒரு நிதியாண்டில் நீங்கள் செய்த அனைத்து நிதி பரிவர்த்தனைகளின் முழுமையான தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இது Form 26AS-ன் விரிவாக்கம் ஆகும்.
இது சொத்து வாங்குதல்கள், அதிக மதிப்பு முதலீடுகள் மற்றும் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட TDS/TCS பரிவர்த்தனைகளின் விவரங்களைக் காட்டுகிறது. சேமிப்புக் கணக்கு வட்டி, ஈவுத்தொகை (Dividend), வாடகை வருமானம், பத்திரங்கள்/அசையா சொத்துக்களின் விற்பனை, வெளிநாட்டிற்குப் பணம் அனுப்புதல், வைப்புத்தொகைகளுக்கான வட்டி, ஜிஎஸ்டி (GST) வருவாய் போன்றவையும் இதில் அடங்கும்.












Click it and Unblock the Notifications