இது அக்னிபாத் அல்ல! அக்னி பரீட்சை! இளைஞர்களின் குரலை கேளுங்கள்! பிரதமர் மோடிக்கு, ராகுல் எச்சரிக்கை
டெல்லி: ‛‛ராணுவம் உள்ளிட்ட முப்படையின் ஆள்சேர்ப்பு நடவடிக்கையான அக்னிபாத் திட்டம் மூலம் அக்னி பரீட்சை நடத்த வேண்டாம். இளைஞர்களின் குரலை கேளுங்கள்'' என ராகுல்காந்தி மத்திய அரசுக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.
இந்தியாவில் உள்ள முப்படைகளில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கு அக்னிபாத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ராணுவம், விமானப்படை, கப்பற்படைக்கு ஆள்சேர்ப்பு நடக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் முப்படைகளிலும் குறைந்தபட்சமாக 4 ஆண்டுகள் வரை இளைஞர்கள் பணி செய்ய முடியும். இந்த திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில் இதுபற்றி விவரத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார்.

4 ஆண்டு பணி
இத்திட்டத்தின் கீழ் வீரர்களுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். இத்திட்டத்தில் பணியில் இணையும் நபர்களில் 4 ஆண்டுகளுக்கு பிறகு 75 சதவீதம் பேர் திரும்பி அனுப்பப்படுவர். 25 சதவீதத்தின் 15 ஆண்டு கால பணியை தொடரலாம். இந்த திட்டத்துக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

போராட்டங்கள் வெடிப்பு
ராணுவத்தில் பணிக்கு சேர ஆர்வமாக இருந்த இளைஞர்கள் பீகாரில் போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு ரயில் மறியல், சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ரயில் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் ஜார்கண்ட் மாநிலம், தமிழகத்தின் வேலூர் மாவட்டத்திலும் போரட்டங்கள் வெடித்துள்ளனர.

ராகுல் காந்தி எச்சரிக்கை
இதுஒருபுறம் இருக்க எதிர்க்கட்சி தலைவர்கள் அக்னிபாத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ‛‛பதவி இல்லை. ஓய்வூதியம் இல்லை. 2 ஆண்டுகளாக ஆட்சேர்ப்பும் இல்லை. ஆண்டுகளுக்கு பிறகு எதிர்காலம் இல்லை. ராணுவத்துக்கு வழங்க வேண்டிய மரியாதை இல்லை. நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் குரலை கேளுங்கள். அவர்களை அக்னிபாத்தில் இணைத்து அவர்களின் பொறுமையுடன் அக்னி பரீட்சை செய்ய வேண்டாம் பிரதமர் அவர்களே'' என கூறியுள்ளார். இதன்மூலம் அக்னிபாத் திட்டத்தில் அதிகார பதவி, ஓய்வூதியம் இல்லாததையும், 4 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் திருப்பி அனுப்பப்படுவதால் எதிர்காலம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் நாட்டில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை இல்லாத நிலையில் இந்த திட்டம் என்பது ராணுவத்தின் மரியாதை குறைக்கும் எனவும், இளைஞர்களின் குரலை மத்திய அரசு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

நேற்று கூறியது என்ன?
முன்னதாக நேற்றும் ராகுல்காந்தி அக்னிபாத் திட்டத்தை விமர்சனம் செய்திருந்தார். அதில் டுவிட்டரில் ‛‛இந்தியா இரு முனைகளில் இருந்தும் அச்சுறுத்தல்களை சந்திக்கும்போது அக்னிபாத் திட்டம் நமது ஆயுதப்படைகளில் செயல்பாட்டை குறைக்கம். பாஜக அரசு நமது படைகளின் கண்ணியம், மரபு, வீரம், ஒழுக்கம் ஆகியவற்றில் சமரசம் செய்வதை நிறுத்த வேண்டும்'' என தெரிவித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications