ஜே.என்.யு. மாணவர் உமர் காலிதுக்கு ஜாமீன் மறுப்பு... டெல்லி வன்முறை வழக்கில் தொடரும் சிறைவாசம்
டெல்லி: டெல்லி வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித்துக்கு ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுத்துள்ளது
கடந்த 2019 ஆம் ஆண்டு 2 வது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு, 2020 ல் குடியுரிமை திருத்தச்சட்டத்தை கொண்டு வந்தது.
இதில் 5 அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகை தரும் இஸ்லாமியர்கள் அல்லாத அகதிகள் இந்திய குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவார்கள் என சட்டம் இயற்றப்பட்டது.

தேசியளவில் வெடித்த போராட்டங்கள்
இந்த சட்டத் திருத்தம் நாடு முழுவதும் பெரும் போராட்டங்களுக்கு வித்திட்டது. சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களின் குடியுரிமை பறிக்கப்படும் அபாயம் ஏற்படும் எனக்கூறி அனைத்து மதத்தினர், மாணவர்கள், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

டெல்லி வன்முறை
டெல்லியில் குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக ஷாஹீன் பாக் என்ற பகுதியில் பெண்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில்தான் டெல்லி போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள், பெண்கள், இஸ்லாமியர்கள் மீது சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதில் 53 பேர் கொல்லப்பட்டனர். 700 பேர் படுகாயமடைந்தனர். வீடுகள், மசூதிகள் தீக்கிரையாக்கப்பட்டன.

உமர் காலித் கைது
இந்த வன்முறையை தூண்டியதாக டெல்லி ஜவஹர்லால் நேரு கல்லூரி மாணவர் உமர் காலித், காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் இஷ்ரத் ஜஹான், ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் உள்ளிட்ட பலரை டெல்லி காவல்துறை தேசதுரோக வழக்கிலும், UAPA சட்டத்தின் கீழும் கைது செய்து டெல்லி திஹார் சிறையில் அடைத்தது.

ட்ரம்ப் வருகையை காரணம் காட்டி கைது
இந்த வன்முறை சம்பவம் நடந்து முடிந்த சில நாட்கள் கழித்து அப்போதைய அமெரிக்காவின் அதிபராக இருந்த டொனால்டு ட்ரம்ப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின்பேரில் இந்தியாவுக்கு வருகை தந்தார். இந்த நிலையில், இந்தியாவில் சிறுபாண்மையினருக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படுவது போன்ற தோற்றத்தை உருவாக்குவதற்காக உமர் காலித் உள்ளிட்டோர் இந்த வன்முறையை தூண்டியதாக காவல்துறை குற்றம்சாட்டியது. இந்த வழக்கில் கைதான காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் இஷ்ரத் ஜஹான் அண்மையில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

சித்தரிக்கப்பட்ட வழக்கு என வாதம்
இந்த நிலையில் டெல்லி திஹார் சிறையில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டு இருக்கும் உமர் காலிதுக்கும் ஜாமீன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் தொடர்ந்த ஜாமீன் மனு இன்று டெல்லி கர்கர்தூம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திரிதீப் பயஸ், உமர் காலித் பேச்சை திரித்து இரண்டு ஊடகங்கள் வெளியிட்ட வீடியோவை போலீசார் ஆதரமாக காட்டி இருப்பதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் சித்தரிக்கப்பட்டவை என்றும் கற்பனையானது எனவும் கூறினார்.

ஜாமீன் மறுப்பு
இதனை மறுத்த அரசு தரப்பு வழக்கறிஞர், உமர் காலித்தின் வாட்ஸ் அப் மெசேஜுகள் ஆதாரமாக இருப்பதாக தெரிவித்தார். இதற்கு பதிலளித்த உமர் காலித் தரப்பு வழக்கறிஞர் திரிதீப் பயஸ், "Delhi Protest Support Group" என்ற வாட்ஸ் அப் குழுமத்தில் உமர் காலித் 4 மெசேஜுகள் மட்டுமே பதிவிட்டுள்ளதாக கூறினார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் உமர் காலிதுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 18 பேரில் 6 பேருக்கு மட்டும் ஜாமீன் கிடைத்துள்ளது. ஆனால் ஒருவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications