ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ்: அதானி குழுமத்துக்கு எதிரான வேதாந்தா மேல்முறையீடு தீர்ப்பாயத்தில் தள்ளுபடி
டெல்லி: அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் திவாலான ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தை ஏலம் எடுத்தது. இதனை எதிர்த்து வேதாந்தா தாக்கல் செய்த மேல்முறையீடுகளை தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (NCLAT) தள்ளுபடி செய்தது. இதன்மூலம் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தை அதானி நிறுவனம் கையகப்படுத்தலுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நம் நாட்டில் உள்ள பிரபலமான நிறுவனங்களில் ஒன்று ஜெய்ப்பிரகாஷ் அசோசியேட்ஸ். இந்த நிறுவனம் ரியல் எஸ்டேட், சிமெண்ட், மின்சாரம், இன்ஜினியரிங், கட்டுமானம் உள்பட பல பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதோடு துணை நிறுவனங்களை உருவாக்கி ஏராளமான முதலீடுகளை செய்தது.

ஜெய்பீ க்ரீன்ஸ் (கிரேட்டர் நொய்டா), ஜெய்பீ க்ரீன்ஸ் விஷ்டவுன் (நொய்டா), ஜேவார் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஜெய்பீ இன்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் சிட்டி உள்ளிட்டவை இந்த நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். டெல்லி என்சிஆரில் வணிக அலுவலகங்கள், வட இந்தியாவில் பல்வேறு இடங்களில் ஹோட்டல்கள், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் சிமெண்ட் ஆலைகள், சுண்ணாம்பு கல் சுரங்கங்கள் ஆகியவற்றை இந்த நிறுவனம் கொண்டுள்ளது.
இதற்கிடையே தான் ஜெய்ப்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனம் கடும் கடன் சுமையில் சிக்கி தவித்தது. கடந்த 2024ம் ஜூன் மாதம் கூட்டு நிறுவன திவால் தீர்வு செயல்முறைக்குள் (CIRP) அந்த நிறுவனம் சேர்க்கப்பட்டது. மொத்தம் ரூ.57,185 கோடி நிலுவைக் கடன் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் தான் இந்த நிறுவனத்தை கையப்படுத்தும் முயற்சியில் தொழிலதிபர்கள் இறங்கினர்.
அந்த வகையில் அதானி குழுமம், திவாலான ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தை சுமார் ரூ.12,000 கோடிக்கும் அதிகமான தொகையில் ஏலத்தில் எடுத்து அதன் கட்டுப்பாட்டைப் பெற்றது. அதானி குழுமத்துடன் வேதாந்தா குழுமம் போட்டியிட்டு தோல்வியை தழுவியது. இந்நிலையில் தான் வேதாந்தா குழுமம், அதானி குழுமத்தை விட கூடுதல் ஏலத்தெகையை குறிப்பிட்டதாக தெரிவித்தது.
அதுமட்டுமின்றி வேதாந்தா குழுமம் அலகாபாத்தில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (The National Company Law Appellate Tribunal) தீர்ப்பாயத்தை நாடியது. விசாரணை நடத்திய தீர்ப்பாயம் அதானி எண்டர்பிரைசஸ் சமர்ப்பித்த ரூ.14,535 கோடி மதிப்புள்ள தீர்வு (Resoultion) திட்டத்திற்கு கடந்த மார்ச் மாதம் 17 ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதை எதிர்த்து வேதாந்தா மேல்முறையீடு செய்தது. மார்ச் 24ல் அதனை விசாரித்த தீர்ப்பாயம் இடைக்கால தடை விதிக்க மறுத்தது. இதையடுத்து வேதாந்தா உச்ச நீதிமன்றம் சென்றது. அஙகும் தடை விதிக்கப்படவில்லை. அதேவேளையில்உச்ச நீதிமன்றம், கண்காணிப்புக் குழுவின் முக்கிய கொள்கை முடிவுகளுக்கு தீர்ப்பாயத்தின் முன்அனுமதி கட்டாயம் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் தான் அதானி நிறுவனத்துக்கு எதிராக வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மேல்முறையீட்டை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. தீர்ப்பாயத்தின் தலைவர் அசோக் பூஷண் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் பரூன் மித்ரா அடங்கிய இருநபர் அமர்வு, தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் (NCLT) முந்தைய முடிவில் தலையிட முறையான காரணங்கள் இல்லை என தீர்ப்பளித்தது. அதுமட்டுமின்றி மேல்முறையீட்டு மனுக்களில் மேல்முறையீட்டுக்கான அடிப்படை காரணங்கள் இல்லை என்று கூறி தள்ளுபடி செய்தது.
இதுதவிரகடன் வழங்குவோர் குழு (CoC) தீர்வு திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதில் முறையாக விதிகளை பயன்படுத்தியுள்ளது. திவால் செயல்முறையில் எந்தவிதமான பொருள்சார்ந்த முறைகேடும் இல்லை என்பதையும் தீர்ப்பாயம் குறிப்பிட்டது. இதன்மூலம் அதானி குழுமம் வெற்றி பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications