முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதங்களை தீட்ட சொன்ன பாஜக பிரக்யா சிங்.. உச்சநீதிமன்றத்தில் காங். வழக்கு
டெல்லி: முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதங்களை கூர்மையாக்கி வைத்து கொள்ளுங்கள் என பேசிய பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் பேசிய பிரக்யாசிங் தாக்கூர், லவ் ஜிஹாத் விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதமேந்துங்கள் என அழைப்பு விடுத்தது சர்ச்சையானது.
இந்து தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்டவர் சாது பிரக்யா சிங் தாக்கூர். 2006-ம் ஆண்டு மாலேகான் வெடிகுண்டு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டவர். இந்துத்துவா தத்துவத்தை வென்றெடுக்க ஆயுதப் பாதையை நம்புகிறவர் பிரக்யா சிங் தாக்கூர்.

2019-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டார் பிரக்யா சிங். மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங்கை தேர்தலில் தோற்கடித்து எம்பியானார்.
மகாத்மா காந்தியடிகளைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேவின் படுதீவிரமான ஆதரவாளர்கள். பிரக்யா சிங் நாடாளுமன்றத்திலும் பொதுக்கூட்டத்திலும் பேசினாலும் வன்முறையைத்தான் போதிப்பார். மும்பை தாக்குதலின் போது போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கே வீர மரணம் அடைந்தார். அவரது தீர செயலை இந்த நாடு பெருமிதத்துடன் போற்றி வருகிறது.
ஆனால் மும்பை வீரத் திருமகன் ஹேமந்த் கார்கே என் சாபத்தால்தான் செத்துப் போனார் என இழிவாகப் பேசியவர் பிரக்யா சிங். மாலேகான் குண்டுவெடிப்பில் என்னை முதல் குற்றவாளியாக்கினார் கார்கே. அப்போது நான் தான் அவருக்கு சாபம் கொடுத்தேன். அதனால்தான் அவர் மரணம் அடைந்தார் என கூறினார் பிரக்யா சிங் தாக்கூர். அவரது இந்தப் பேச்சு கடும் கண்டனத்துக்குள்ளானது.
இந்நிலையில் கர்நாடகா மாநிலம் ஷிவ்மோகாவில் இந்துத்துவா அமைப்பு ஒன்றின் மாநாட்டில் பிரக்யா சிங் பங்கேற்றார். ஷிவ்மோகா மாநாட்டில் பிரக்யா சிங் தாக்கூர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாகி உள்ளது. அம்மாநாட்டில், பாவிகளை, அடக்குமுறையாளர்களை அப்புறப்படுத்த வேண்டும். இது ஒரு சன்னியாசியின் புரிதல். லவ் ஜிஹாத்தில் ஈடுபடுவர்களையும் இதேபோல் நாம் அப்புறப்படுத்த வேண்டும். இந்த பாவிகளிடம் இருந்து உங்கள் மகள்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள். நம் பிள்ளைகளுக்கு நற்பண்புகளை போதிப்போம்.
உங்கள் வீடுகளில் ஆயுதங்களை எப்போதும் வைத்திருக்கவும். அந்த ஆயுதங்களை கூர்மையாக்கி வைத்து கொள்ளவும். குறைந்தபட்சம் காய்கறி வெட்டும் கத்தியையாவது கூர்மையாக்கி வைக்கவும். நமக்கு தற்காப்பு உரிமை இருக்கிறது. நம் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தால் பதிலடி தருவோம் என்றார் பிரக்யா சிங் தாக்கூர்.
பிரக்யா சிங் தாக்கூரின் இந்தப் பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பிரக்யா சிங் தாக்கூர் மீது ஷிவ்மோகா போலீசில் காங்கிரஸ் புகார் கொடுத்தது. இதனடிப்படையில் பிரக்யா சிங் மீது 7 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், பிரக்யா சிங் தாக்கூர் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் பிரக்யா சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் ஜெய்ராம் ரமேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications