ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி.. தமிழ்நாடு அரசு வாதத்துக்கு கிடைத்தது வெற்றி
டெல்லி: ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டம் செல்லும் என்றும் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் திருப்தி அளிக்கிறது என்றும் உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையின்போது மதுரை பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.. காரணம், இது தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும்.
ஆனால் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக சொல்லி, அதற்கு எதிராக விலங்குகள் நல வாரியம், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்து கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 8-ந் தேதி உத்தரவிட்டது.

மெரினா பீச்: இது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், வீரர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது... ஜல்லிக்கட்டு மீதான தடைக்கு எதிராக தமிழ்நாட்டில் பெருமளவில் இளைஞர்கள் ஒன்று திரண்டு பலவிதமான போராட்டங்களை நடத்தினார்கள்.. அதிலும், சென்னையில் மெரினா கடற்கரையில் நடந்த போராட்டமானது, நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது.
இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வகைசெய்து தமிழகத்தில் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து விலங்குகள் வதைத் தடுப்பு சட்டம் (தமிழ்நாடு திருத்தம்)-2017 என்ற பெயரில் நிரந்தரச் சட்டமும் இயற்றப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது...

கடும் எதிர்ப்பு: அதேபோல, மகாராஷ்டிர அரசும் மாட்டு வண்டி பந்தயத்தை அனுமதிக்க சட்டத்திருத்தம் செய்துள்ளது. இந்த இரு மாநில சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன... பீட்டா (PETA) போன்ற அமைப்புகள் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் கடுமையான விதிமுறை மீறல்கள் நடைபெறுகிறது என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை பீட்டா உள்ளிட்ட விலங்குகள் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் முன் வைத்திருந்தது.
இதற்கு கடும் எதிர்த்து தெரிவித்து, தமிழக அரசு வாதங்களை முன்வைத்தது.. "ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாசாரம், பாரம்பரியம் சார்ந்த நிகழ்வு. இறைவழிபாடு, கொண்டாட்டம் என பல்வேறு அம்சங்கள் கொண்டது. ஜல்லிக்கட்டு மீது தடை விதிக்க நீதிமன்றங்களால் முடியாது. தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு குடியரசுதலைவர் ஒப்புதலும் கிடைத்துள்ள நிலையில் விலங்குகள் நல அமைப்புகளின் மனுக்களை, விசாரிக்க கூடாது.
ஜல்லிக்கட்டு: ஜல்லிக்கட்டு என்பது அனைத்து விதிமுறைகளும் சரியாக வகுக்கப்பட்டு எந்த விதமான சமரசமும் இல்லாமல் நடத்தப்படுகிறது... காளைகள் துன்புறுத்தல் என்பது வெறும் கட்டுக்கதையாகும்.. அதனால் பீட்டா அமைப்பின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதத்தை முன்வைத்தது தமிழ்நாடு அரசு.
அதுமட்டுமல்ல, பெரு, கொலம்பியா மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் எருது சண்டையை தங்கள் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக கருதுகின்றன என்று வாதித்த தமிழக, ஜல்லிக்கட்டில் ஈடுபடும் காளைகள் ஆண்டு முழுவதும் விவசாயிகளால் பராமரிக்கப்படுகின்றன என்பதையும் தெளிவாக சுட்டிக்காட்டியிருந்தது.
தீர்ப்பு இன்று: இவ்வாறாக அனைத்து வாதங்களும் நடந்து முடிந்தநிலையில், தீர்ப்பு மட்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.. இப்போது இன்றைய தினம், அதாவது மே 18ம் தேதி அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.. அதன்படியே, நீதிபதி கே எம் ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், "தமிழகத்தில் கலாச்சாரத்தில் கலந்துள்ளது. தமிழ்நாடு அரசு அளித்த ஆவணங்கள் அனைத்தும் திருப்தியாக உள்ளது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்ற தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தத்தை ஏற்கிறோம். தமிழ்நாடு அரசின் சட்டதிருத்தம் அடிப்படை உரிமைகளை மீறவில்லை.. தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டம் விதிவிலக்கிற்கே உட்பட்டே உருவாக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டு கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.
மீறவில்லை: தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் அரசியல்சாசன பிரிவு 14 மற்றும் 21 ஆகிய அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட எந்த விதிமுறைகளையும் மீறவில்லை. ஜல்லிக்கட்டு, தமிழகத்தின் கலாசாரத்தில் கலந்துள்ளது. ஜல்லிக்கட்டு கலாசார நிகழ்வா என்பதை மாநில அரசின் சட்டமே தீர்மானிக்கும்" என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டம் செல்லும் என சுப்ரீம் கோர்ட் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவசர சட்டத்துக்கு தடை கோரிய பீட்டா உள்ளிட்ட அமைப்புகளின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.












Click it and Unblock the Notifications