நீட் தேர்வு முறைகேடுகளுக்கு யாரும் பொறுப்பாக முடியாது.. தேவ கவுடா பேச்சால் ராஜ்யசபாவில் கொந்தளிப்பு!
டெல்லி: நீட் தேர்வு முறைகேடுகள் விவகாரத்தில் மத்திய அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது; நீட் தேர்வு முறைகேடுகளுக்கு யாரும் பொறுப்பாகவும் முடியாது என முன்னாள் பிரதமர் தேவகவுடா ராஜ்யசபாவில் பேசியதற்கு "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நீட் தேர்வு மோசடிகள் குறித்து விவாதிக்க "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் வலியுறுத்தியதால் ராஜ்யசபா நடவடிக்கைகள் பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபா இரண்டிலுமே இன்று "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் நீட் தேர்வு மோசடிகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தினர். லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து பேசிய போது அவரது மைக் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. லோக்சபா முதலில் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பகல் 12 மணிக்கு சபை கூடிய போதும் "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. லோக்சபாவின் அடுத்த கூட்டம் ஜூலை1-ந் தேதி நடைபெறும்.

இதேபோல ராஜ்யசபாவிலும் நீட் தேர்வு மோசடிகள் குறித்து விவாதிக்க "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் வலியுறுத்தினர். ஆனால் ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் இதற்கு அனுமதி மறுத்தார். இதனால் "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். அப்போது நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த களேபரங்களுக்கு நடுவே எழுந்து பேசிய முன்னாள் பிரதமர் தேவகவுடா, நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மத்திய அரசு முறையான, சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நீட் தேர்வு முறைகேடுகளுக்கு யாரும் பொறுப்பாகவும் முடியாது. நாடாளுமன்றத்தை முறையாக நடத்த அனுமதிக்க வேண்டும் என்றார். தேவகவுடாவின் இந்த பேச்சுக்கும் எதிராகவும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் ராஜ்யசபா நடவடிக்கைகள் முதலில் பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன. பின்னர் சபை கூடிய போதும் தொடர்ந்து அமளி நீடித்ததால் ராஜ்யசபா நடவடிக்கைகள் பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications