மாணவர்கள் நமது நாட்டின் எதிர்காலம் - நீட் தேர்வுக்கு ஆதரவாக கடிதம் எழுதிய கல்வியாளர்கள்
நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்துவதற்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களும்எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நீட், ஜேஇஇ தேர்வுகளை தாராளமாக நடத்தலாம் என்று நூற்றுக்கும
டெல்லி: இளைஞர்கள், மாணவர்களின் கனவும், எதிர்காலமும் எக்காரணம் கொண்டு சமரசத்திற்கு உட்படக்கூடாது. ஆனால் சிலர் தங்களின் அரசியல் லாபத்திற்காக அரசுக்கு எதிராக கருத்துகள் தெரிவித்து வருகின்றனர் என்று நீட் தேர்வு விவகாரத்தில் நூற்றுக்கணக்கான கல்வியாளர்கள் ஆதரவு தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டது கல்வித்துறைதான். 5 மாத காலமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் போடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் நாடு முழுவதும் ஜேஇஇ நுழைவுத்தேர்வு வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதியும், நீட் தேர்வு செப்டம்பர் 13ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த காலத்தில் இதுபோன்று தேர்வுகள் நடத்துவது மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி கடும் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார்.
சோனியா காந்தி தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஜேஇஇ, நீட் தேர்வுகள் நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வுகளை ஒத்திவைக்க உத்தரவிடக்கோரி மாநில முதல்வர் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என்று மேற்குவங்க முதல்வர் முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வுக்கு ஆதரவு
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான கல்வியாளர்கள் ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், தங்களின் சிறப்பான ஆட்சியின் கீழ் ஜேஇஇ, நீட் தேர்வுகள் பாதுகாப்பான முறையில் நடத்தி, 2020-21 கல்வியாண்டிற்கு மாணவர்கள் தயாராக வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்று நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளனர்.

இயல்பு நிலை திரும்பல்
கடந்த 5 மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் இந்திய மாநிலங்கள் பெரிய அளவில் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. இருப்பினும் தங்களது தலைமையின் கீழ் பலமுறை சரிவிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளோம். தற்போது உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கொரோனா வைரஸ் உடன் வாழப் பழகிக் கொண்டிருக்கிறோம்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி
கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த விஷயத்தில் அரசின் நடவடிக்கைகளை நாங்கள் பாராட்டுகிறோம். இளைஞர்களும், மாணவர்களும் நமது நாட்டின் எதிர்காலம். கொரோனா பரவலால் இவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. கல்லூரி சேர்க்கை, வகுப்புகள் தொடக்கம் குறித்து விரைவாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நீட் தேர்வுககு வரவேற்பு
வழக்கம் போல் நடப்பாண்டிலும் 12ஆம் வகுப்பில் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் தங்கள் வாழ்வின் அடுத்தக்கட்டத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வு குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனை முழு மனதுடன் வரவேற்கிறோம்.

மாணவர்களின் எதிர்காலம்
தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இளைஞர்கள், மாணவர்களின் கனவும், எதிர்காலமும் எக்காரணம் கொண்டு சமரசத்திற்கு உட்படக்கூடாது. ஆனால் சிலர் தங்களின் அரசியல் லாபத்திற்காக அரசுக்கு எதிராக கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

அரசுக்கு முழு ஒத்துழைப்பு
தங்களின் சிறப்பான ஆட்சியின் கீழ் ஜேஇஇ, நீட் தேர்வுகள் பாதுகாப்பான முறையில் நடத்தி, 2020-21 கல்வியாண்டிற்கு மாணவர்கள் தயாராக வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்று நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்த விவகாரத்தில் அரசின் முடிவிற்கு கல்வியாளர்களாகிய நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர். இதில் நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் கையெழுத்து போட்டு தங்களின் ஆதரவினை பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications