ஜனாதிபதி தேர்தல்.. முடிவை மாற்றுகிறாரா ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்.. டெல்லியில் பரபரப்பு
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோரை ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை சந்தித்து பேசியுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த ஜூன் 9ஆம் தேதி அறிவித்தது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான வேலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கின.

வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
இதனைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார். முறையே இவர்கள் இருவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஜார்க்கண்ட் முதல்வர் ஆதரவு யாருக்கு?
குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களது ஆதரவு யாருக்கு என்பது குறித்து பல்வேறு கட்சிகளும் அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியின் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் ஆதரவு யாருக்கு என்பது தெரியாமல் உள்ளது. மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற எதிக்கட்சிகளின் கூட்டத்தில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பங்கேற்றிருந்தார். ஆனால் பாஜக கூட்டணி சார்பாக திரெளபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின், ஜார்க்கண்ட் முதலமைச்சரின் ஆதரவு யாருக்கு என்பதில் குழப்பம் ஏற்பட்டது.

ஜேஎம்எம் ஆலோசனை
இதனைத்தொடர்ந்து கடந்த சனிக்கிழமையன்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு, அம்மாநிலத்தில் பழங்குடியின மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது. இதனால் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரெளபதி முர்முவை ஆதரிக்கவில்லை என்றால், ஜார்க்கண்ட் மாநிலத்தில் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என்பதால் ஆலோசனை மேற்கொண்டது. இதுமட்டுமல்லாமல் பாஜக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு, வேட்புமனு தாக்கல் செய்த பின் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனை தொலைபேசி வாயிலாக அழைத்து ஆதரவு கோரி இருந்தார்.

டெல்லியில் சந்திப்பு
இந்த நிலையில் டெல்லி வந்த ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதனால் அக்கட்சியின் ஆதரவு யாருக்கு என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. இருந்தும் ஜேஎம்எம் கட்சியின் ஆதரவை பெறுவதில் இரு தரப்பினரும் தீவிரமாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications