நாடு முழுவதும் பொது சிவில் சட்டம்.. ஜார்க்கண்ட் பழங்குடிகளுக்கு மட்டும் விதிவிலக்கு.. அமித்ஷா பல்டி!
டெல்லி: நாடு முழுவதும் அனைவருக்குமான பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்; ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டாலும் பழங்குடி மக்களுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டு பேசிய அமித்ஷா இதனைத் தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: ஜார்க்கண்ட் சட்டசஐ தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்துக்கானது மட்டுமல்ல. ஜார்க்கண்ட் மாநிலத்தின் எதிர்கால நலனுக்குமானதாகும்.

ஜார்க்கண்ட் மாநில மக்கள்தான், ஊழல் ஆட்சி வேண்டுமா? வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கும் அரசு வேண்டுமா? என்பதை முடிவு செய்ய வேண்டும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊடுருவல்காரர்களை அனுமதித்து, பழங்குடி மக்களின் நிலமும் பெண்களும் பறிபோக உதவுகிற அரசுதான் வேண்டுமா? என்பதை ஜார்க்கண்ட் வாக்காளர்கள் முடிவெடுப்பர்.
பாஜகவின் தேர்தல் அறிக்கையானது இதர பிற்படுத்தப்பட்டோர், பழங்குடிகள், தலித்துகளுக்கான வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறது. இந்த நாட்டிலேயே சொன்னதை எல்லாம் செய்யக் கூடிய ஒரே கட்சி பாஜகதான். ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஆட்சியில் பழங்குடி மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது. சந்தால் பர்கானாவில் பழங்குடி மக்கள் தொகை எண்ணிக்கை மிகக் கடுமையாக குறைந்துவிட்டது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ஊடுருவல்காரர்களை பாஜக ஆட்சி விரட்டியடிக்கும்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ2,100 உதவித் தொகை வழங்கப்படும். தீபாவளிக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்குவோம். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ500-க்கு விற்பனை செய்யப்படும். ஜார்க்கண்ட் இளைஞர்கள் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சந்தால் பர்கானா பகுதியில் வங்கதேச முஸ்லிம்கள் ஊடுருவலால் பழங்குடி மக்கள் தொகை கணிசமாக குறைந்துவிட்டது; மேற்கு வங்கத்தின் வழியாக வங்கதேச முஸ்லிம்களை ஊடுருவ அனுமதித்ததே ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் அரசுதான் என தீவிரமாக பாஜக பிரசாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications