கூட்டு முயற்சியே எந்த வெற்றிக்கும் வழி வகுக்கும்.. பிரதமர் அலுவலக ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த மோடி
டெல்லி: டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மோடி, கடந்த 5 ஆண்டுகள் தமக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு அலுவலக ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.
மக்களவை தேர்தலில் பெரும் வெற்றி வாகை சூடிய மோடி, மீண்டும் பிரதமராக உள்ளார். இந்நிலையில் இன்று காலை பிரதமர் அலுவலகம் சென்ற மோடிக்கு அங்கிருந்த ஊழியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர்கள் மத்தியில் நன்றி உரை நிகழ்த்தினார் மோடி.

இதற்கு முன்னர் நீங்கள் அனைவரும் பல அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றியிருப்பீர்கள். ஆனால் உங்களுடன் கடந்த 5 ஆண்டுகள் பணியாற்றியது தான் எனது முதல் அனுபவம் என குறிப்பிட்டார். நிர்வாகத் திறமை கொண்ட தலைமையால் தான் சிறப்பான வெற்றிக்கு வழிகாட்ட முடியும்.
அதே போல கூட்டு முயற்சியே எந்த ஒரு வெற்றிக்கும் வழி வகுக்கும். அந்த வகையில் தேசியளவில் ஒரு பிரதமர் போற்றப்படுகிறார் என்றால், அதற்கு உங்கள் உழைப்பும் ஒரு காரணம் என குறிப்பிட்டார். நேரம், காலம் பார்க்காமல் நாட்டு நலன்களுக்காக தம்முடன் இணைந்து பணியாற்றியதற்காக நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதாக கூறினார்.
அரசின் பொறுப்புகளை உணர்ந்து பிரதமர் அலுவலக ஊழியர்களாகிய நீங்கள் கடமையை சிறப்பாக செய்தீர்கள். பல நேரங்களில் குடும்பத்தைக் கூட மறந்துவிட்டு கால நேரம் பார்க்காமல் பணியாற்றியுள்ளீர்கள். அந்த சமயங்களில் எல்லாம் உங்கள் தியாகத்தை புரிந்து கொண்ட உங்கள் குடும்பத்தினருக்கு நன்றி கூறுவது என் கடமை என்றார்.
மக்களவை தேர்தலில் நான் பெற்றுள்ள வரலாற்று வெற்றி நம்முடைய கூட்டுழைப்பால் சாத்தியமானது என்றார். கடந்த காலத்தை போலவே, அடுத்து வரும் 5 ஆண்டுகள் தம்முடன் இணைந்து சிறப்பாக பணியாற்ற தயாராகும்படி பிரதமர் அலுவலக ஊழியர்களை மோடி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் பல அடுக்கு, கூட்டுத் தலைமை என்பதற்கே இதுவரை முக்கியத்துவம் அளித்து வந்துள்ளதாக மோடி கூறினார்.
நாளை மறுதினம் வாரணாசிக்கு செல்லும் மோடி, தம்மை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications