படித்த பெண்ணுக்கு ஜாமீன் தர கூடாதா.. இது என்ன லாஜிக்! சரமாரியாக விளாசிய சுப்ரீம் கோர்ட்! என்னாச்சு
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் பிஆர்எஸ் கட்சியின் தலைவர் கேசிஆர் மகள் கவிதா கைதாகி சிறையில் இருந்த நிலையில், அவருக்கு இப்போது ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்போது பெண்களுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து டெல்லி ஐகோர்ட் கூறிய கருத்துக்கு சுப்ரீம் கோர்ட் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த மதுபான கொள்கை அம்மாநில அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியது. அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தொடங்கி பலரும் கைதாகினர்.

இந்த வழக்கில் ஆம் ஆத்மி தலைவர்களைத் தவிர வேறு சில முக்கிய நபர்களும் கைதாகினர். அதன்படி பாரத ராஷ்டிர சமிதி தலைவர் கேசிஆரின் மகளும் முன்னாள் எம்பியுமான கவிதாவும் கைது செய்யப்பட்டு இருந்தார்.
நிபந்தனை ஜாமீன்: சுமார் 5 மாதங்கள் அவர் சிறையில் இருந்த நிலையில், அவருக்கு உச்ச நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த மதுபான கொள்கை வழக்கில் ஏற்கனவே மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், இப்போது கவிதாவுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பி.ஆர்.கவை மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கவிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. கவிதா ஏற்கனவே ஐந்து மாதங்களுக்கும் மேலாகச் சிறையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஜாமீன் வழங்கினர்.

நீதிபதிகள் கருத்து: இது தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், "இந்த வழக்கில் விசாரணை முடிந்துவிட்டது போலவே தெரிகிறது. எனவே, கைதான நபர் காவலில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர் ஏற்கனவே ஐந்து மாதங்களாகச் சிறையில் இருக்கிறார்.. சிசோடியாவை போலவே இவர் மீதான வழக்கு விசாரணையும் விரைவாக முடிவது போல தெரியவில்லை" என்று குறிப்பிட்டனர்.
மேலும், ஜாமீன் மனுக்களை பரிசீலிக்கும்போது சட்டம் பெண்களின் சிறப்புச் சலுகை அளிப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், பண மோசடி தடுப்புச் சட்டத்தின் 45வது பிரிவு பெண்களை ஜாமீனில் விடுவிப்பதை அனுமதிப்பதாகத் தெரிவித்தனர்.
அதிருப்தி: முன்னதாக கவிதா ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் தான் முதலில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இருப்பினும், அந்த மனுவை டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் நிராகரித்தனர். வழக்கமாகப் பெண்களுக்கு இதுபோன்ற வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்பதை கவிதா தரப்பு வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.
இருப்பினும், அதை ஏற்க மறுத்த டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள், "அவர் ஒரு படித்த பெண். அவரது கல்வி மற்றும் அந்தஸ்து (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) ஆகியவற்றை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, அவர் எளிதாக 'பாதிக்கப்படக்கூடிய' பெண்ணாகக் கருதி ஜாமீன் வழங்க முடியாது" என்று கூறியிருந்தனர்.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. குறிப்பிட்ட சட்டத்தை டெல்லி ஐகோர்ட் முற்றிலும் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த சுப்ரீம் கோர்ட், " நீதிமன்றங்கள், இதுபோன்ற விஷயங்களில் கருத்துச் சொல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். ஒரு பெண் அதிகம் படித்தவள் என்பதற்காகவோ அல்லது அவர் எம்.எல்.ஏ. என்பதற்காகவோ ஜாமீன் வழங்காமல் இருக்கக் கூடாது" என்று கூறினர்.












Click it and Unblock the Notifications