தமிழக காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்?.. கார்கேவிடம் முக்கிய கோரிக்கை வைத்த கே.எஸ்.அழகிரி?
டெல்லி: தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு யாரை கட்சி தலைமை நியமிக்கும் என்பது குறித்து தற்போதைய தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி அளித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள கே.எஸ். அழகிரியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து வேறு தலைவரை நியமிக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, வேணுகோபால் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
தலைவர் பதவிக்கு ஜோதிமணி எம்பி, செல்லக்குமார் எம்பி, கார்த்தி சிதம்பரம், முன்னாள் எம்பி விசுவநாதன் ஆகியோர் ரேஸில் உள்ளனர். இதில் விசுவநாதன் கடுமையாக முயற்சித்து வருகிறார்.

இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று இரவு அகில இந்திய தலைவர் கார்கேவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அரசியல் நிலவரங்கள் பற்றி பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறுகையில் தமிழக காங்.தலைவர் பதவிக்கு யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி தான்.
காங்கிரஸ் மாநில தலைவராக எனக்கு உரிய பணியை செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக அரசியல் தொடர்பாக காங். தேசிய தலைவர் கார்கேவுடன் ஆலோசனை நடத்தினேன். பதவி கேட்டு காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தது கிடையாது. பதவி கிடைத்த பின்னர், பதவியை தக்க வைக்க தலைவர்களை சந்திப்பது கிடையாது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நீடித்தாலும் மகிழ்ச்சி, வேறு ஒருவரை நியமித்தாலும் மகிழ்ச்சி தான். எனக்கு ஒரு பணி வழங்கப்பட்டால் அதை மகிழ்வுடன் செய்வேன்.
தமிழ்நாட்டில் அதிகமான எண்ணிக்கையில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இன்றைக்கும் என்னுடைய கருத்து எவ்வளவு தொகுதி பெறுகிறோம் என்பதல்ல... எவ்வளவு வெற்றி பெறுகிறோம் என்பது தான். நான் பதவியில் இருந்தாலும் இல்லையென்றாலும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் , 2021 சட்டசபை தேர்தல், 2022 ஊரக உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவைகளின் போது கூட்டணி கட்சி ஒதுக்கிய பெரும்பாலான இடங்களில் தனது தலைமையிலான பிரச்சாரம் காரணமாக காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பதால் வரும் மக்களவை தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்காக பிரச்சாரம் செய்ய விரும்புவதாகவும் அதுவரை தனது பதவியை நீட்டிக்க வேண்டும் என கே எஸ் அழகிரி, கார்கேவிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications