விலைவாசி உயர்வை பற்றி மக்கள் கவலைப்படவில்லை.. பாஜக அமைச்சர் கருத்து.. விளாசிய கபில் சிபல்!
டெல்லி: நாடு முழுக்க மக்களின் வருமானம் அதிகரித்து உள்ளது இதனால் விலைவாசி உயர்வை பற்றி மக்கள் யாரும் குற்றம் சொல்லவில்லை என்று மத்திய பிரதேச பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா தெரிவித்துள்ளார். பாஜக அமைச்சரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் எம்பி கபில் சிபல் விமர்சனம் வைத்துள்ளார்.
நாடு முழுக்க பெட்ரோல், டீசல் தொடங்கி சமையல் எரிவாயு சிலிண்டர் வரை பலவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தொடர்ந்து கடந்த 7 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தலா 25 பைசாவில் இருந்து 35 பைசாவில் உயர்ந்து வருகிறது.
டெல்லி பெட்ரோல் விலை லிட்டருக்கு 110.04 ரூபாய்க்கும், மும்பையில் 115.85 ரூபாய்க்கும், சென்னையில் 106.66 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் டீசல் 99.95 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னையில் டீசல் 102.95 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மும்பையில் டீசல்107.53 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

விமர்சனம்
தொடர் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. மக்களிடையே விலைவாசி உயர்வு எதிர்ப்பை பெற்றுள்ள நிலையில், மக்கள் யாரும் இதை குற்றம் சொல்லவில்லை என்று மத்திய பிரதேச பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், சமுதாயத்தில் மக்களின் வருமானம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

காரணம் என்ன
அனைத்து விதமான மக்களிடமும் வருமானமும், வாழ்க்கை தரமும் உயர்ந்துள்ளது. இதனால் யாரும் விலைவாசி உயர்வு குறித்து கவலைப்பட கூடாது. மக்களின் வருமானம் அதிகரித்துள்ள போது விலைவாசி பற்றி யாரும் பேச கூடாது. மக்கள் விலைவாசி பற்றி கவலைப்படவில்லை. அதை நீங்கள் ஏற்றுக்கொண்டால் இதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசால் திட்டங்களை இலவசமாக வழங்க முடியாது. வரி மூலம் மட்டுமே அரசு திட்டங்களை செயல்படுத்த முடியும் பாஜக அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா தெரிவித்துள்ளார்.
Recommended Video

பதிலடி
பாஜக அமைச்சரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் எம்பி கபில் சிபல் விமர்சனம் வைத்துள்ளார். அதில், இந்தியாவில் மக்களின் வருமானம் எல்லாம் உயரவில்லை. பாஜகவின் வருமானம்தான் உயர்ந்து உள்ளது. பாஜகவின் கட்சி வருமானமும் தலைவர்களின் வருமானமும்தான் உயர்ந்துள்ளது. பாஜக தலைவர்கள் கனவு உலகத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

கனவு உலகம்
அதனால்தான் அவர்கள் இப்படி கருத்து தெரிவிக்கிறார்கள். 6000 ரூபாய் வருமானம் வாங்கியவர்கள் 25 ஆயிரம் ரூபாய் வாங்குவதாக அவர் கூறியுள்ளார். அவர் சொல்வது கொடூரமான நகைச்சுவை. மக்கள் பாஜக மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்.2022 உத்தர பிரதேச தேர்தலில் இருந்து பாஜகவின் வீழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கும். பாஜக மதத்தை வைத்து மட்டுமே அரசியல் செய்கிறது, மக்களை பற்றி நினைப்பது இல்லை, என்று காங்கிரஸ் எம்பி கபில் சிபல் விமர்சனம் வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications