முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதி பாகிஸ்தானா? கர்நாடக நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
டெல்லி: முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் மேற்கு பெங்களூரை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதி பேசியிருந்தார். இந்த கருத்து பெரும் விவாதங்களை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. சம்பந்தப்பட்ட நீதிபதி மன்னிப்பு கோரியதாக மத்திய அரசு வாதிட்ட நிலையில், இவ்வழக்கு தற்போது முடித்து வைக்கப்பட்டிருக்கிறது.
நீதிபதிகளின் தீர்ப்புகள் விவாதங்களை ஏற்படுத்தியிருந்த காலம் போய்.. இப்போது அவர்களின் கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா கடந்த இரண்டு நாட்களுக்கு வழக்கு ஒன்றில் கூறியிருந்த கருத்து உச்சநீதிமன்றம் வரை பஞ்சாயத்தை கூட்டியுள்ளது.

நீதிபதி பேசியது என்ன?: "மைசூர் சாலை மேம்பாலத்திற்குச் செல்லுங்கள், ஒவ்வொரு ஆட்டோ ரிக்ஷாவிலும் 10 பேர் உள்ளனர். கோரி பால்யாவிலிருந்து மார்க்கெட்டுக்கு செல்லும் மைசூர் மேம்பாலம் இந்தியாவில் இல்லை. அது பாகிஸ்தானில் இருக்கிறது" என்று கூறியிருந்தார். இந்த கருத்தை கேட்டு அதிருப்தியடைந்த உச்சநீதிமன்றம், தானாக முன்வந்து விசாரணையை தொடங்கியது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இது குறித்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அப்போது, "கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் உரிய விவரங்களை பெற்று, உச்சநீதிமன்ற தலைமை பதிவாளர் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகளை சமூக ஊடகங்கள் கவனித்து வரும் இக்காலத்தில், நீதித்துறையை சேர்ந்தவர்கள் கவனமாக செயல்பட வேண்டும்" என்று அறிவுறுத்தியிருந்தனர்.
இப்படியாக பஞ்சாயத்து பெரியதாக வெடித்த நிலையில், கர்நாடக நீதிபதி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார். "நீதித்துறை நடவடிக்கைகளின்போது நடந்த சில விஷயங்கள் சமூக வலைதளங்களில் சூழலுக்கு அப்பாற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அது உள்நோக்கத்துடனோ அல்லது யாருடைய மனதையோ அல்லது எந்த குறிப்பிட்ட சமூகத்தையோ புண்படுத்தும் நோக்கத்திலோ தெரிவிக்கப்ப டவில்லை. ஒருவேளை அந்த கருத்தில் யாருடைய மனதும் புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
என்னதான் நீதிபதி மன்னிப்பு கேட்டிருந்தாலும், நீதிபதிகளின் கருத்துக்கள் குறித்து உச்சநீதிமன்றம் விரைவில் ஒரு வரைமுறையை வகுக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதனையடுத்து இது தொடர்பான வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. நீதிபதி ஸ்ரீஷானந்தாவுக்கு ஆதரவாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கடரமணி, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகியிருந்தனர். அப்போது விசாரணையில்,
"நீதிபதி ஸ்ரீஷானந்தா கருத்து தெரிவித்த வீடியோவை பார்த்தோம். இந்த விகாரத்தை தனிப்பட்ட முறையில், நீதிபதிகள் அறையில் வைத்து விசாரிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நீதிபதி ஸ்ரீஷானந்தா மன்னிப்பு கோரியுள்ளார். எனவே வழக்கை மேலும் இழுக்க வேண்டாம், முடித்து வைக்க வேண்டும்" என்று வெங்கடரமணி, துஷார் மேத்தா வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர், "இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நீதிபதி ஸ்ரீஷானந்தா நீதிமன்றத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது மன்னிப்புக் கோரியுள்ளார் என்பதை பதிவாளர் அறிக்கை மூலம் அறிந்து கொண்டோம். நீதித்துறையின் கண்ணியத்தை கருத்தில் கொண்டு உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தாவுக்கு நோட்டீஸ் அனுப்புவதைத் தவிர்த்துவிட்டோம். 'பாகிஸ்தான்' என்ற வார்த்தையை பயன்படுத்திய கர்நாடக நீதிபதி ஸ்ரீஷானந்தாவின் மன்னிப்பை ஏற்கிறோம்" என்றும் கூறியுள்ளது.
இதில் குறிப்பாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "இந்தியாவின் எந்தப் பகுதியையும் பாகிஸ்தான் என்று யாரும் அழைக்க வேண்டாம், இது தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது" என்று கண்டிக்கும் தோரணையில் கூறினார். பின்னர் நீதிபதி ஸ்ரீஷானந்தாவுக்கு எதிரான விசாரணை கைவிடுவதாக நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications