ஆக்சிஜன் தட்டுப்பாடு மரணம்.. மத்திய இணை அமைச்சருக்கு காங்., சிபிஐ கட்சிகள் உரிமை மீறல் நோட்டீஸ்
டெல்லி: ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இந்தியாவில் யாரும் பலியாகவில்லை என்ற மத்திய இணை அமைச்சரின் கருத்துக்கு எதிராக இன்று ராஜ்ய சபாவில் காங்கிரஸ் எம்பி கேசி வேணுகோபால் மற்றும் சிபிஐ எம்.பி., பினோய் விஸ்வம் ஆகியோர் உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்தனர்.
இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பலர் பலியானதாக செய்திகள் வந்தன. இது தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியானதோடு உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு மனுக்கள் ஆக்சிஜன் தேவை என்று கூறி தாக்கல் செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் ஆக்சிஜன் பகிர்ந்தளிப்பு கொள்கையை உச்ச நீதிமன்றமும் விமர்சனம் செய்து இருந்தது.

இந்த நிலையில்தான் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் போது எந்த மாநிலத்திலும், யூனியன் பிரதேசத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா மரணங்கள் ஏற்படவில்லை என்று மத்திய அரசு ராஜ்ய சபாவில் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், தாக்கல் செய்த அறிக்கையில் இப்படி குறிப்பிட்டு இருந்தார்.
அதில், இந்தியாவில் இரண்டாம் அலையின் போது நோயாளிகள் அதிகம் ஆனதால் ஆக்சிஜன் தேவையும் அதிகம் ஆனது. ஆக்சிஜன் தேவை 9,000 மெட்ரிக் டன் வரை சென்றது. ஆனால் இதனால் மரணங்கள் ஏற்படவில்லை. எங்கும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மரணம் ஏற்பட்டதால் மாநில அரசுகள் எங்களிடம் பதிவு செய்யவில்லை.
இந்தியாவில் மாநிலங்களின் தேவையை பொறுத்து ஆக்சிஜன் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதற்கான பார்முலா உருவாக்கப்பட்டு மாநிலங்களின் ஆக்டிவ் கேஸ்களில் அடிப்படையில் ஆக்சிஜன் பிரித்து கொடுக்கப்பட்டது, என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவாரின் இந்த கருத்துக்கு இன்று மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இவரின் கருத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்பி கேசி வேணுகோபால் மற்றும் சிபிஐ எம்.பி., பினோய் விஸ்வம் ஆகியோர் உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்தனர்.
இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பலர் கஷ்டப்பட்டனர். பல செய்திகள் வெளியானது. ஏன் உச்ச நீதிமன்றம் கூட இதில் தலையிட்டு நடவடிக்கைகளை எடுத்தது. அப்படி இருந்தும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக யாரும் இறக்கவில்லை என்று அமைச்சர் சொல்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் அவரின் கருத்துக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் அளிக்கிறோம் என்று கூறி எம்பி கேசி வேணுகோபால் மற்றும் சிபிஐ எம்.பி., பினோய் விஸ்வம் ஆகியோர் நோட்டீஸ் தாக்கல் செய்தனர்.
இன்று இரண்டு அவையிலும் பெகாசஸ் சர்ச்சை, ஆக்சிஜன் தட்டுப்பாடு மரணம், விவசாயிகள் போராட்டம் என்று பல விஷயங்கள் காரணமாக கடும் அமளி ஏற்பட்டது. இதனால் இன்று முழுதாக நடக்காமல் அவை நாளை ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications