6 வாரங்களில் 5 ஹெலிகாப்டர் விபத்துகள்.. கேதர்நாத்தில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து இன்று அதிகாலையில் கேதர்நாத் புறப்பட்ட ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 23 மாத குழந்தை உள்பட 7 பேரும் பலியாகியுள்ளனர். அகமதாபாத் விமான விபத்தின் சோகமே இன்னும் தீராத நிலையில் இந்த விபத்து மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்டில் தொடர்ச்சியாக ஹெலிகாப்டர் விபத்துக்குள் ஏற்பட்டு வருகிறது. கடந்த 6 வாரங்களில் மட்டும் இது 5வது விபத்து ஆகும். குறிப்பாக கேதர்நாத் பகுதியில் இந்த விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்தின் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், டேக் ஆஃப் ஆன சில நொடிகளில் மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கொடூர விபத்தில் விமானத்தில் இருந்த ஒருவரை தவிர மற்ற 241 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கல்லூரி விடுதியில் இருந்து மாணவர்களும் இதில் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதன் சோகமே இன்னும் தீராத நிலையில், உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் இருந்து இன்று அதிகாலையில் கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் 23 மாத குழந்தை, விமானி உள்பட ஹெலிகாப்டரில் பயணித்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். கவுரிகுண்ட் வனப்பகுதி அருகில் சென்றிருந்த போது, திடீரென ஹெலிகாப்டர் மாயமாகி இருக்கிறது.
5 வது முறையாக விபத்து
இதனையடுத்து அப்பகுதியில் தேடப்பட்ட நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது தெரிய வந்துள்ளது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. கவுரிகுண்ட் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி உள்ளது. சார் தம் என்று சொல்லப்படும் கேதர்நாத் யாத்திரையின் 4 புனித தலங்களில் ஒன்றுக்கு அருகில் இந்த விபத்து அரங்கேறி இருக்கிறது. கடந்த 6 வாரங்களில் மட்டும் இது 5வது விபத்து ஆகும்.
* உத்தரகாண்டின் கேதர்நாத் பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக அடிக்கடி விமான விபத்துக்கள் நடப்பது கூறப்படுகிறது. கடந்த மே மாதம் 15 ஆம் தேதி கெளரிகுண்ட் அருகே ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்
* இந்த விபத்து பற்றி மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) கூறுகையில், "உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் SDRF குழு, நிர்வாகக் குழுவுடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்த விபத்து கேதார்நாத் செல்லும் பாதையில் நிகழ்ந்துள்ளது என்று கூறப்பட்டது.
* இதற்கு முன்னதாக, கடந்த 7 ஆம் தேதி AW119 ரக ஹெலிகாப்டர் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்டது. இதில் பயணம் செய்தவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர். கடந்த மே மாதம் 17 ஆம் தேதி டெயில்-ஸ்டிரைக் லேண்டிங் காரணமாக மற்றொரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இருப்பினும், இந்த விபத்தில் விமானி மற்றும் மருத்துவர் காயமின்றி உயிர் தப்பினர்.
மீட்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர்
* ஜூன் 8, 2025 அன்று ஒரு தனியார் ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக மலையில் மோதி விபத்துக்குள்ளானது. விமானியின் தவறான கணிப்பே விபத்துக்கு காரணம் என்றும் கூறப்பட்டது.
* இதற்கு முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி கேதார்நாத்தில் ஏர் பஸ் H125 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 7 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கள் யாத்ரீகர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது.
* கடந்த 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது மீட்புப் பணியில் ஈடுபட்ட Mi-17V5 ஹெலிகாப்டர் கெளரிகுண்ட் அருகே விபத்துக்குள்ளானது. இதில் 20 பேர் உயிரிழந்தனர். குறிப்பாக மே மற்றும் ஜூன் மாதத்திலேயே அடிக்கடி ஹெலிகாப்டர் விபத்துகள் ஏற்படுவதினை சமீபத்திய விபத்துக்கள் காட்டுகின்றன.
ஹெலிகாப்டர் விபத்துகளுக்கான காரணங்கள்:
* அடிக்கடி மாறும் மோசமான வானிலை, மேகமூட்டம் மற்றும் குறைந்த வெளிச்சம் ஆகியவை விமானிகளுக்கு சவால்களை ஏற்படுத்துகின்றன.
* இதனால் வழிதவறும் அபாயம் இருப்பதால் இந்த விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது.
* இதேபோன்று குறுகிய பள்ளத்தாக்குகள் மற்றும் உயரமான ஹெலிபேடுகள் ஆபத்தானவையாக கருதப்படுகிறது.
கடந்த 2025 ஆம் ஆண்டில், இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹெலிகாப்டர் ஆபரேட்டர்களுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இதில், பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுதல், சரியான பயிற்சி, வழக்கமான அறிக்கைகள் மற்றும் பதிவுகளை பராமரித்தல் மேலும், மோசமான வானிலையின்போது விமானங்களை இயக்குவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications