நிதிப் பகிர்வில் பாரபட்சம்: டெல்லியில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கேரளா அரசு போராட்டம்!
டெல்லி: மத்திய பாஜக அரசின் புறக்கணிப்பைக் கண்டித்து தென்மாநிலங்கள் போர்க்கோலம் பூண்டுள்ளன. டெல்லியில் நேற்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இன்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் அம்மாநில எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் தமிழ்நாடு, டெல்லி எம்பிக்கள் பங்கேற்றனர்.
மத்திய பாஜக அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கை பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகா காங்கிரஸ் எம்பி சுரேஷ், தென்னிந்திய மாநிலங்கள் இணைந்து தனிநாடு கோரும் நிலைமை உருவாகும் என எச்சரித்திருந்தார்.

கர்நாடகா போராட்டம்: இதனைத் தொடர்ந்து கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று மத்திய அரசைக் கண்டித்து கர்நாடகா எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கேரளா எம்பிக்கள் போராட்டம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கேரளா போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஆதரவு: கேரளா அரசு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான கட்டுப்பாட்டைச் செயல்படுத்தி, மாநிலங்களின் குரல்வளையை நெரிக்க மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள அரசுக்குப் பாராட்டுக்கள். மத்திய அரசு சில காலமாகவே மாநில அரசுகளுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் நிலைமை வேகமாக மோசமடைந்துள்ளது. நிதிக் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதில் கேரள அரசின் உறுதிப்பாட்டை தான் முழுமையாக ஆதரிக்கிறோம். இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பை கேரள அரசுக்கு வழங்கத் தயாராக உள்ளது. இந்த முக்கியமான சவாலை எதிர்கொள்ள கேரள அரசின் நடவடிக்கைகளோடு, தமிழக அரசின் முயற்சிகளையும் ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்.

நன்றி தெரிவித்த பினராயி விஜயன்: இதற்கு பதிலளித்த கேரளா முதல்வர் பினராயி விஜயன், டெல்லியில் கேரளா நடத்த உள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சல்யூட்! ஜனநாயகம், அரசியலமைப்பு விழுமியங்களை பாதுகாக்க ஒன்றாக பயணிப்போம் என தெரிவித்திருந்தார்.
#WATCH | Kerala CM Pinarayi Vijayan along with party leaders stage protest against Central government over 'financial injustice' at Jantar Mantar, in Delhi. pic.twitter.com/ElVIKb9EKJ
— ANI (@ANI) February 8, 2024
டெல்லியில் போராட்டம்: இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அம்மாநில எம்.பிக்கள், மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். நிதிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இப்போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு மற்றும் டெல்லி எம்பிக்களும் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications