குழப்பவோ குழம்பவோ வேண்டாம்.. "அவங்களுக்கு" எல்லாம் தெரியும்.. பாஜக சீக்ரெட்டை போட்டு உடைத்த குஷ்பு
டெல்லி: அதிமுக கூட்டணி விவகாரத்தில் அண்ணாமலை பேசியது குறித்து யாரும் குழப்பவோ குழம்பிக்கவோ வேண்டாம் என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு சுந்தர் தெரிவித்துள்ளார்.
அதிமுக- பாஜக இடையே கூட்டணி குறித்து அண்மைக்காலமாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. கூட்டணி இருக்கா, இல்லையா, நம்பலாமா நம்பக் கூடாதா என மனதில் கேள்வி எழும் அளவுக்கு சந்தேகங்கள் இருந்து வந்தன.
அந்த அளவுக்கு இரு தரப்பும் நினைத்தால் "அடித்துக் கொள்வது" இல்லாவிட்டால் "கைகுலுக்கிக் கொள்வதும்" என இருந்தனர். எல்லாம் எதுவரை தெரியுமா? பாஜக தலைவர் அண்ணாமலை அரும்பாக்கத்தில் கூட்டணி கட்சியினர் முன்பு பேசும்வரைதான்!

சென்னை அரும்பாக்கம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அரும்பாக்கத்தில் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, அதிமுகவுடன் கூட்டணி வைப்பதை விரும்பவில்லை. தமிழகத்தில் பாஜகவை வளர்க்க தனித்து போட்டியிடுவதே சிறந்தது. ஒரு வேளை அதிமுகவுடன் கூட்டணி அமைந்தால் நான் என் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சிக்கு தொண்டனாக பணியாற்றுவேன் என அதிர்ச்சி தரும் விதமாக பேசியிருந்தார்.

மூத்த நிர்வாகிகள்
இதற்கு கட்சியின் மூத்த நிர்வாகிகளே எதிர்ப்பு தெரிவித்தனர். கூட்டணி குறித்த முடிவை தேசிய தலைமைதான் எடுக்கும். இப்போதே கூட்டணி குறித்து பேசும் அளவுக்கு தற்போது தேர்தல் ஏதும் நெருங்கவில்லை என தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதற்கு அதிமுகவும் எதிர்வினையாற்றியிருந்தனர்.

டெல்லி சென்ற அண்ணாமலை
இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு அண்ணாமலை டெல்லி சென்றார். டெல்லி செல்லும் முன் கூட அதிமுகவுடனான கூட்டணி இல்லை என்ற அளவுக்கு பேசியிருந்தார். ஆனால் டெல்லி போய்விட்டு வந்ததும் கூட்டணி குறித்து மத்திய குழு முடிவு எடுக்கும் என அந்தர் பல்டி அடித்துவிட்டார். ஒரே நாளில் அவருடைய மாற்றத்திற்கான காரணம் தெரியவில்லை.

பாஜக மூத்த தலைவர்கள்
இந்த நிலையில் அண்ணாமலை பேசியது குறித்து பாஜக மூத்த தலைவர்கள் சிலர் விமர்சித்தாலும் சிலர் அவருக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டிருந்தனர். அதாவது பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி சிக்மக்ளூரில் பேசுகையில் தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்வேன் என கூறியிருந்தது சரிதான். அப்படி சொன்னால்தான் அதிமுகவினர் தாங்களாகவே வந்து எங்களிடம் பேச்சுவார்த்தைக்கு முன்வருவார்கள். பாஜக ஆதரவின்றி அதிமுக செயல்பட முடியாது. எங்களை தேடி வருவார்கள். தன்னிச்சையாக முடிவு எடுத்தால்தான் கட்சியை வளர்க்க முடியும் என கூறியிருந்தார்.

முரண்பாடான கருத்துகள்
இப்படி பாஜகவுக்குள்ளேயே முரண்பாடான கருத்துகளால் குழப்பம் ஏற்பட்டது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவோ தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி என கிருஷ்ணகிரியில் சொல்லிவிட்டு சென்றுள்ளார். ஆனால் சி.டி. ரவியின் அதிமுகவுக்கு எதிரான கருத்தை முன் வைக்கிறார். இதனால் பலருக்கு குழப்பமான மனநிலையில் இருந்து வருகிறார்கள்.

சீக்ரெட்டை போட்டுடைத்த குஷ்பு
இதுகுறித்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில் அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவர். அவர் ஒரு விஷயத்தை பேசுகிறார் என்றால் யோசிக்காமல் பேச மாட்டார். அவர் பேசுவது டெல்லி தலைமைக்கும் தெரியாமல் இருக்காது. எனவே இந்த விஷயத்தில் தேவை இல்லாமல் குழம்பவும் வேண்டாம், மற்றவர்களை குழப்பவும் வேண்டாம். எல்லாவற்றையும் கட்சி பார்த்துக் கொள்ளும் என்பதே என் கருத்து. இவ்வாறு குஷ்பு தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications