"என்னை விட்டுருங்க.. இந்த வேலையே வேண்டாம்.." பிரபல நிறுவனத்தின் தலைவர் ராஜினாமா! காரணம் காற்று மாசு
டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று மாசு எந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. இதனால் அங்கு வாழும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் காற்று மாசு காரணமாகப் பிரபல பார்ம நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ராஜினாமா செய்திருக்கிறார். இது பெரும் விவாதமாகி உள்ளது.
குளிர் காலம் என வந்துவிட்டாலே தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துவிடும். இந்தாண்டும் கூட அதே நிலைமை தான். கடந்த சில வாரங்களாகவே டெல்லியில் காற்று மாசு உச்சத்திற்குப் போய்விட்டது. இதனால் அங்குப் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பலருக்கும் மோசமான சுவாசப் பிரச்சினைகளும் ஏற்படுகிறது. இதற்கிடையே பிரபல நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் காற்று மாசு காரணமாகத் தனது பதவியையே ராஜினாமா செய்திருக்கிறார்.

பிரபல நிறுவனம்
இந்தியாவில் இயங்கி வரும் முக்கியமான மருந்து நிறுவனங்களில் ஒன்று அகும்ஸ் டிரக்ஸ் அண்ட் பார்மசூட்டிகல்ஸ். இந்த நிறுவனத்தின் தலைமையகம் டெல்லியில் அமைந்துள்ளது. இதன் பைலான்ஸ் பிரிவை வழிநடத்துபவர் ராஜ்குமார் பஃப்னா.. டெல்லியில் காற்று மாசு இப்போது உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், அதையே காரணமாகச் சொல்லி தனது பதவியை ராஜ்குமார் ராஜினாமா செய்துள்ளார்.
முக்கிய நிறுவனத்தில் உயர் அதிகாரியாக வேலை செய்யும் ஒருவர், காற்று மாசைக் காரணமாகச் சொல்லி பதவி விலகுவது அங்கு நிலைமை எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதையே காட்டுகிறது. இது இணையத்தில் மிகப் பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது..
காற்றின் தரம்
தலைநகர் டெல்லியைப் பொறுத்தவரை அங்குக் காற்றின் தரம் மிக மோசமாக இருக்கிறது. அங்குக் காற்றுத் தரக் குறியீடு சுமார் 460ஐ எட்டி, "ஆபத்தான" நிலையில் உள்ளது. இது மக்களின் ஆரோக்கியத்தையும் அன்றாட வாழ்க்கையையும் கடுமையாகப் பாதிக்கிறது. இன்று திங்கட்கிழமை காலை 7 மணிக்குக் கூட தெளிவான விஷன் இல்லை. அடர்ந்த பனி போல அங்குப் புகை சூழ்ந்து இருந்தது. காற்றின் தரமும் 402ஆகப் பதிவாகி மிகவும் மோசமான பிரிவில் இருந்தது.
இன்று ஒரு நாள் என இல்லை.. டெல்லியில் கடந்த பல வாரங்களாகவே இதே நிலை தான் இருக்கிறது. இதனால் அங்குப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதைக் காரணமாகச் சொல்லியே கடந்த டிசம்பர் 3ல் ராஜ்குமார் ராஜினாமா மெயில் அனுப்பி இருக்கிறார். டெல்லி காற்று மாசு மட்டுமே தனது ராஜினாமா முடிவுக்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜ்குமார் ராஜினாமா
அவரது ராஜினாமா லெட்டர் டிசம்பர் 12ம் தேதி ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவரது கடைசி வேலை நாள் டிசம்பர் 31ஆக நிர்ணயிக்கப்பட்டது. அகும்ஸ் டிரக்ஸ் அண்ட் பார்மசூட்டிகல்ஸ் பொதுத் துறை நிறுவனமாக உள்ள நிலையில், ஒழுங்குமுறை தாக்கல் அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டது.
ராஜ்குமார் தனது ராஜினாமா மெயிலில், "டெல்லி மாசுபாடு காரணமாக, எனது நிதித் தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். தயவு செய்து விரைவில் என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த மாற்றத்தின் போதும் நிறுவனத்திற்கு உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறேன்" என்று அவர் தனது மெயிலில் குறிப்பிட்டுள்ளார். ராஜ்குமாரின் ராஜினாமாவை ஏற்ற அந்த நிறுவனம், "உங்கள் முடிவில் வருத்தம் இருந்தாலும், உங்கள் உடல்நலப் பிரச்சினை கருதி அதை ஏற்றுக் கொள்கிறோம்" எனப் பதிலளித்துள்ளது.
உடல்நலப் பிரச்சினை
மும்பையைச் சேர்ந்த ராஜ்குமார், வேலை காரணமாகவே டெல்லியில் குடிபெயர்ந்துள்ளார். அங்குக் காற்று மாசு பல மடங்கு மோசமாக இருந்த சூழலில், இதனால் அவருக்குத் தொடர் இருமல், சுவாசப் பிரச்சனைகள் ஏற்பட்டதாக அந்த நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார். கடந்த ஆகஸ்ட் மாதம் தான் இந்த நிறுவனத்தில் நிதித் துறைத் தலைவராக ராஜ்குமார் பதவியேற்றார். இருப்பினும், காற்று மாசை சமாளிக்க முடியாமல் வெறும் நான்கே மாதத்தில் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications