4000 கோடியில்,சபரிமலை விமான நிலையம்.. எப்படி இருக்கும்? மகிழ்ச்சியுடன் பிரதமர் மோடி பகிர்ந்த விஷயம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஐய்யப்ப பக்தர்கள் வந்து செல்வதற்காக சபரிமலையில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை விரைவில் நிறைவேறப்போகிறது. சபரிமலை அருகே எருமேலி செருவள்ளி எஸ்டேட்டில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்திருக்கிறது.

சபரிமலையில் விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்திருப்பதை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார், இது ஆன்மிக சுற்றுலாவுக்கு நல்ல செய்தி என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

know all details about Sabarimala Airport; Modi welcome Ministry approves project

கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தியா முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் ஐப்பசி,கார்த்திகை,மார்கழி ஆகிய மாதங்களில் வந்து செல்வார்கள். ஒவ்வொரு தமிழ் மாதம் பிறந்ததும் முதல் 4 முதல் ஐந்து நாட்கள் வரை ஐயப்ப பக்தர்கள் வருகை தருவார்கள்.

தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்தியாவை தாண்டி சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் , இலங்கை உள்பட அண்டை நாடுகளிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க வருவார்கள்.

அப்படி ஐயப்பனை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் சாலை வழியாகவே சபரிமலை சென்றுவர முடியும். ரயில் போக்குவரத்தோ, விமானப்போக்குவரத்தோ அருகில் இல்லை குறைந்தது 80 கிலோ மீட்டர் தூரம் தள்ளியே ரயில் போக்குவரத்து உள்ளது. அங்கிருந்து முற்றிலும் மலைப்பாதை வழியாகவே சபரிமலைக்கு வர வேண்டும். இந்நிலையில் சபரிமலையில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று பல வருடங்களாக பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

ஆனால் சபரிமலையை சுற்றியுள்ள மலைப்பகுதிகள் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள பகுதி மட்டுமின்றி, மிகவும் அடர்ந்த வனப்பகுதிகள் ஆகும். எனவே விமான நிலையம் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி உள்பட பல்வேறு வகையான அனுமதி வாங்க வேண்டியிருந்தது. மேலும் விமான நிலையம் அமைக்க நல்ல இடத்தையும் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. இந்நிலையில் சபரிமலை அருகே கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள எருமேலி செருவள்ளி எஸ்டேட்டில் அரசு, தனியார் பங்களிப்பில் 2,250 ஏக்கர் பரப்பளவில் ரூ.4,000கோடியில் விமான நிலையம் கட்ட கேரள அரசு திட்டமிடடிருந்தது.

இதுதொடர்பாக மத்திய அரசின்பல்வேறு துறைகளிடம் கேரள அரசு தரப்பில் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. இதில் முதல் விஷயம் பாதுகாப்பு துறை அனுமதி தான். அதற்கான அனுமதி ஏற்கெனவே கிடைத்துவிட்டது. அடுத்ததாக தற்போது எருமேலியில் சபரிமலை சர்வதேச கிரீன்ஃபீல்ட் ஏர்போர்ட் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்திருக்கிறது.

know all details about Sabarimala Airport; Modi welcome Ministry approves project

இது சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்காக விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என்று பல வருடங்களாக போராடி வரும் கேரள அரசுக்கு மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் போது தொழில்நுட்ப-பொருளாதார சாத்தியக்கூறு ஆய்வு குறித்த மாநில அரசின் அறிக்கையை கவனமாக பரிசீலித்தே மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. விரைவில் விமான நிலையம் எப்படி அமைக்கப்படும் என்பது குறித்து விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) விரைவில் கேரள அரசு தயாரிக்க உள்ளதாம். விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க, தகுதியான நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து அரசு டெண்டர் விடும் என்றும் சொல்கிறார்கள்.

சபரிமலை விமான நிலையத்தின் சிறப்பு அதிகாரி வி துளசிதாஸ், இந்தச் செய்தியை உறுதியும் செய்திருந்தார் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்றதன் மூலம், சபரிமலையில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் , மிகப்பெரிய தடையை தாண்டிவிட்டதாகக் கூறினார்.

சபரிமலையில் விமான நிலையம் அமைப்பது குறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "சபரிமலை பகுதியில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.4,000 கோடி மதிப்பில் 2,250 ஏக்கர் பரப்பில் அரசு, தனியார் பங்களிப்பு திட்டத்தில் புதிய விமான நிலையம் கட்டப்படும். கேரள அரசின் தொழில் வளர்ச்சி கழகம், விமான நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்ளும்" என்று கூறியிருந்தது.

இந்நிலையில் சபரிமலை அருகே எருமேலி செருவள்ளி எஸ்டேட்டில் அமையப்போகும் இந்த விமான நிலையம் 'டேபிள்டாப்' விமான பாதையாக இருக்கக்கூடாது என்று விமான போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளதால், கூடுதலாக 301 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம் ஓடுபாதையின் நீளம் 3.4 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக புதிதாக அமைய உள்ள சபரிமலை விமான நிலையம், மதுரை விமான நிலையம் இடையே உள்ளதொலைவு பற்றி விமான போக்குவரத்து துறை விளக்கம் கேட்டது. சபரிமலை விமான நிலையத்தால் மதுரை விமான நிலையத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று கேரள அரசு தரப்பில் ஆதாரங்களுடன் விளக்கம் அளிக்கப்பட்டதை தொடர்ந்தே சபரிமலை விமான நிலையத்துக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசின் இதர துறைகளும் அடுத்தடுத்து அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சபரிமலையில் புதிதாக அமைக்கப்படும் விமான நிலையம் கேரளாவின் 5-வது விமான நிலையம் ஆகும். இது திருவனந்தபுரத்தில் இருந்து 138 கி.மீ., கொச்சியில் இருந்து 113 கி.மீ., கோட்டயத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவிலும் அமையப்போகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருந்து 48 கி.மீ. தொலைவில் இந்த விமான நிலையம் அமைப்போகிறது.

இந்த விமான நிலையம் சபரிமலை பக்தர்களுக்கு மட்டுமின்றி, தேக்கடி, வாகமன், கோட்டயம், மூனாறு மற்றும் இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு செல்லவும் வசதியாக இருக்கும் என்பதால் கேரள அரசு இந்த விமான நிலையம் அமைக்க நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வந்தது. இப்போது விமான நிலையம் அமையப்போவது உறுதியாகி உள்ளது.

சபரிமலை விமான நிலையம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், 'சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி வழங்கியதை வரவேற்றார். இது சுற்றுலா மற்றும் ஆன்மிக சுற்றுலாவுக்கு நல்ல செய்தி என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+