“மணிப்பூரை பிரிச்சு எங்களுக்கு தனி யூனியன் பிரதேசம் கொடுத்துடங்க” மோடியிடம் குக்கி எம்எல்ஏக்கள் மனு!
இம்பால்: மணிப்பூரில் பழங்குடியின சமூகமான குக்கி மக்களுக்கும், பழங்குடியினர் அல்லாத மெய்தி மக்களுக்கும் இடையே வன்முறை வெடித்ததால் அமைதியின்மை நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று மணிப்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்த நிலையில், மணிப்பூரை பிரித்து எங்களுக்கு தனி யூனியன் பிரதேசம் கொடுக்க வேண்டும் என குக்கி எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மணிப்பூரில் நிலவும் இன மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரக் கோரி, குக்கி-ஜோ சமூகத்தைச் சேர்ந்த பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளனர். இதில் ஏழு பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் அடங்குவர். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட, பிரதமர் தலையிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மெய்தி மற்றும் குக்கி சமூகத்தினரிடையே மே 2023-ல் வெடித்த வன்முறைச் சம்பவங்களுக்குப் பிறகு, பிரதமர் மோடி முதல் முறையாக இன்று மணிப்பூர் மாநிலத்திற்குச் சென்றார். இந்த வன்முறைகளில் இதுவரை குறைந்தது 260 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
குக்கி சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு அளித்த கடிதத்தில், தங்களது சமூகத்தினர் "இனப்படுகொலைக்கு" ஆளாகி வருவதாகவும், "பள்ளத்தாக்குப் பகுதிகளிலிருந்து முற்றிலுமாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும்" குற்றம் கூறியிருக்கின்றனர். குக்கிகள் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர், அதேசமயம் மெய்திகள் பள்ளத்தாக்குப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
இரு தரப்பினரும் "அண்டை வீட்டினராக மட்டுமே அமைதியாக வாழ முடியும், ஒருபோதும் ஒரே வீட்டில் வாழ முடியாது எனவே, சட்டமன்றத்துடன் கூடிய தனி யூனியன் பிரதேசம் வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த வேண்டும்" என பிரதமரை குக்கி எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடிதத்தில், "இது மட்டுமே எங்கள் மக்களுக்கு நிரந்தர அமைதியையும், பாதுகாப்பையும், நீதியையும், உரிமையுணர்வையும் கொண்டு வரும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications