தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு.. மத்திய அரசே முழுமையான காரணம்.. புட்டு, புட்டு வைக்கும் தரவுகள்!
டெல்லி: முன்கூட்டிய தொலைநோக்கு சிந்தனை இல்லாததே இந்தியாவின் தற்போதைய தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று பல்வேறு தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
இந்தியாவில் தொடர்ந்து அடங்காமல் போட்டு வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவேக்சின், புணே சீரம் நிறுவனத்தின் கோவிஷில்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவில் போடப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் கடந்த 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் திட்டமிட்டபடி இந்த திட்டம் தொடங்கப்படவில்லை.

தடுப்பூசி தட்டுப்பாடு
தமிழ்நாடு, பாஜக ஆளும் கர்நாடகம் உள்ளிட்ட 70% மாநிலங்கள் எங்களிடம் போதிய தடுப்பூசிகள் கையில் இல்லை என்று அறிவித்ததால் இன்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட முடியாமல் தடுமாறி வருகின்றன. நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறைக்கு மத்திய அரசிடம் தொலை நோக்கு சிந்தனை இல்லாததே காரணம் என்று கூறப்படுகிறது.

தரவுகள் காட்டுவது இதுதான்
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போட தொடங்கியபோது இந்தியா 16.5 மில்லியன் தடுப்பூசிகளையே கொள்முதல் செய்து இருந்தது. இதில் கோவிஷில்டின் 11 மில்லியன் டோஸ்களும், கோவேக்சினின் 5.5 மில்லியன் டோஸ்கள் தடுப்பூசிகள் ஆகும். ஆனால் உலக நாடுகள் பலவும் தடுப்பூசி போட தொடங்கிய ஆரம்ப காலத்தில் இந்தியாவை விட பலமடங்கு தடுப்பூசிகளை ஆர்டர் செய்துள்ளது என்று அமெரிக்காவின் டியூக் உலகளாவிய சுகாதார கண்டுபிடிப்பு மையம் கூறியுள்ள தரவுகள் நமக்கு காட்டுகின்றன.

இங்கிலாந்து முன்னிலை
அதாவது இங்கிலாந்து தடுப்பூசி ஆரம்ப காலமான மே 2020-ல் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியின் 90 மில்லியன் டோஸ்களையும், ஜூலை 2020-ல் பைசர் பயோடெக் தடுப்பூசியின் 30 மில்லியன் டோஸ்களையும்,
2020 ஆகஸ்டில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியின் 30 மில்லியன் டோஸ்களையும் ஆர்டர் செய்துள்ளது. அமெரிக்கா 2020 ஜூலையில் நொவெக்ஸ் தடுப்பூசியின் 100 மில்லியன் டோஸ்களையும், பைசர் பயோடெக் தடுப்பூசியின் 100 மில்லியன் டோஸ்களையும், 2020 ஆகஸ்டில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியின் 100 மில்லியன் டோஸ்களையும், மாடர்னா தடுப்பூசியின் 100 மில்லியன் டோஸ்களையும் ஆர்டர் செய்திருந்தது.

ஆஸ்திரேலியா அசத்தல்
ஐரோப்பிய யூனியன் நாடுகள் 2020 ஆகஸ்ட்டில் அஸ்ட்ரா ஜெனேகா - 300 மில்லியன் டோஸ்கள், அக்டோபர் 2020-ல் ஜான்சன் அண்ட் ஜான்சன் - 200 மில்லியன் டோஸ்கள், நவம்பர் 2020-ல் பைசர் பயோடெக் - 300 மில்லியன் டோஸ்களை ஆர்டர் செய்து இருந்தன. ஆஸ்திரேலியா செப்டம்பர் 2020-ல் அஸ்ட்ரா ஜெனேகாவின் 33.8 மில்லியன் டோஸ்களையும், பிரேசில் 2020 ஆகஸ்ட்டில் அஸ்ட்ரா ஜெனேகாவின் 90 மில்லியன் டோஸ்களையும், ஜெர்மனி செப்டம்பர் 2020-ல் பைசர் பயோடெக்கின் 30 மில்லியன் டோஸ்களையும் ஆர்டர் செய்தன.

இந்தியா மிக மோசம்
ஆசிய நாடான ஜப்பானும் ஜூலை 2020-ல் பைசர் பயோடெக்கின் 120 மில்லியன் டோஸ்களையும், 2020 ஆகஸ்ட்டில் அஸ்ட்ரா ஜெனேகாவின் 50 மில்லியன் டோஸ்களையும், அக்டோபர் 2021-ல் மாடர்னா தடுப்பூசியின் 50 மில்லியன் டோஸ்களையும் ஆர்டர் செய்து இருந்தது. மேற்கண்ட இந்த நாடுகளின் தடுப்பூசி கொள்முதலுக்கான ஆர்டர் அளவுகளை பார்க்கும்போது இந்தியாவின் அளவு மிக, மிகக் குறைவாகும். இந்தியா ஆரம்ப கட்ட ஆர்டருக்கு பிறகு மாநிலங்கள் தடுப்பூசி இல்லை என்று அறிவித்தபிறகுதான் இந்தியா அடுத்தகட்ட ஆர்டரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தேவை வரும்போதே ஆர்டர்
ஏப்ரல் 28 ஆம் தேதி வரை இந்தியா ரூ .1,700 கோடிசெலவில் 110 மில்லியன் கோவிஷில்டு தடுப்பூசி டோஸுக்கு ஆர்டர் செய்துள்ளது. இந்த அளவுகள் மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வழங்கப்படும். இதே போல் ரூ .772 கோடியில் கோவாக்சினின் 50 மில்லியன் டோஸ்களுக்கு அரசு முன்கூட்டியே ஆர்டர் செய்தது. அதாவது ஜனவரி மாதம் ஆர்டருக்கு பிறகு இந்தியா தேவை வரும்போதே அடுத்தகட்ட தடுப்பூசிகளை ஆர்டர் செய்துள்ளது.

தொலைநோக்கு சிந்தனை இல்லை
''அரசும் முன்கூட்டியே ஆர்டர் செய்யாததால், தங்கள் நிறுவனம் உற்பத்தி திறனை அதிகரிக்கவில்லை. மாநிலங்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு பல மாதங்களுக்கு நீடிக்கும்'' என்று சீரம் நிறுவனத்தின் ஆதர் பூனவல்லா தெரிவித்தார். முன்கூட்டிய தொலைநோக்கு சிந்தனை இல்லாததே இந்தியாவின் தற்போதைய தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று தெளிவுகள் தரவாக காட்டுகின்றன.

இதுவரை எத்தனை பேருக்கு தடுப்பூசி
ஆகஸ்ட் மாதம் வரை வரை 300 மில்லியன் சுகாதார மற்றும் முன்னணி தொழிலாளர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடுவதை இந்தியா இலக்காகக் கொண்டிருந்தது. இவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட இந்தியாவுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளின் 600 மில்லியன் டோஸ் தேவைப்படும். ஆனால் மே 5 நிலவரப்படி இந்தியா 31 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications