எனது ஆட்சி காலம் "ஜங்கிள் ராஜ்" இல்லை.. ஏழைகளின் ஆட்சியாக இருந்தது.. லாலு பிரசாத் யாதவ் உற்சாக உரை!
டெல்லி: எனது ஆட்சி "காட்டாட்சி" (Jungle Raj) கிடையாது, ஏழை மக்களுக்கான ஆட்சியாக இருந்தது என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
லாலு பிரசாத் யாதவ் என்றாலே மாட்டுத்தீவன ஊழல்.. பீகாரில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள்.. போன்றவை மக்கள் மனதில் பதியும் அளவுக்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் எதிர் துருவ அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை நாடு முழுவதும் முன்னெடுத்தன.
அதே நேரம், அவர் மத்திய ரயில்வே துறை அமைச்சராக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பணியாற்றியபோது ரயில்வே துறையை அதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் சென்று சாதித்தார்.
"நான் மாடுகளிலிருந்து எப்படி பால் கறக்க வேண்டும் என்பதை அறிந்தவன், எனவே நஷ்டத்தில் இயங்கும் ரயில்வே துறையை எப்படி லாபத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பதையும் அறிந்திருந்தேன்.." என்று முன்பு ஒருமுறை தனது பேட்டியின்போது லாலு பிரசாத் யாதவ் தெரிவித்திருந்தார்.

சிறையிலிருந்து ஜாமீனில் வந்த லாலு
மாட்டுத்தீவன வழக்குடன் தொடர்புடைய டும்கா கருவூல வழக்கின் பின்னணியில், சிறையில் இருந்த லாலு பிரசாத் யாதவ் கடந்த ஏப்ரல் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். கடந்த 40 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் எந்த ஒரு தேர்தல் பிரச்சாரத்திலும் பங்கேற்பதை தவற விடாத லாலு பிரசாத் யாதவ், 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டசபை தேர்தலில் பிரச்சாரம் செய்ய முடியவில்லை. ஏனென்றால் அவர் சிறையில் இருந்தார். மேலும் சமீப காலமாக அவரது உடல்நிலையில் நிறைய பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்.

கட்சி துவக்க விழா
கடந்த ஜனவரி மாதம் நுரையீரல் தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இப்படியாக பல்வேறு சோதனையான காலகட்டங்களை எதிர்கொண்டு வரும் லாலு பிரசாத் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் 25வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக தனது தொண்டர்கள் மத்தியில் நேற்று உரையாற்றினார்.

நேரலையில் பார்த்த தொண்டர்கள்
இதையடுத்து பிஹார் தலைநகர் பாட்னாவில் கட்சி தலைமை அலுவலகத்தில் பிரம்மாண்ட டிவி பொருத்தப்பட்டு அங்கு லாலு பிரசாத் யாதவ் மகன்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அதை நேரலையாக பார்த்தனர். லாலு பிரசாத் யாதவ் பேசும்போது அவ்வப்போது சிறிது நேரம் பிரேக் எடுத்துக்கொண்டு பேச வேண்டிய நிலைமையில் இருந்தார். இது அவரது உடல் நலன் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை காட்டுவதாக இருந்தது.

ஏழைகளின் ஆட்சி
லாலு பேசுகையில், அரசியல் எதிரிகள் எனது ஆட்சி காலத்தை காட்டாட்சி என்று பிம்பம் கட்டமைத்து விட்டனர். ஆனால் உண்மை அது கிடையாது. அது ஏழைகளின் ஆட்சி. கடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் சிறையில் இருந்து வெளியே வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் அது முடியவில்லை.

பின் வாங்க மாட்டேன்
நமது அரசியல் எதிரிகள் கொடுக்கும் நெருக்கடிகள் மற்றும் சதிகளுக்காக பயந்து பின்வாங்க போவதோ தலைகுனிய போவது கிடையாது. ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கிறது. தேஜஸ்வி யாதவ் இந்த பிரச்சினைகளை சிறப்பாக எதிர் கொள்வார். நாம் இந்த நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்வோம்.

சுற்றுப் பயண திட்டம்
தேஜஸ்வி யாதவ் மற்றும் ராப்ரி தேவி ஆகிய இருவரும், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த என்னை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாவிட்டால் நான் ராஞ்சியிலேயே இறந்திருப்பேன். விரைவில் நான் பாட்னா வருகிறேன். மாநிலம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து ஒவ்வொருவரையும் சந்திப்பேன். மாணவர்கள், விவசாயிகள், இளைஞர்கள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

பீகார் மக்கள் நிலைமை
ராஷ்ட்ரிய ஜனதா தளம் மட்டும் தான் தற்போதைய பிரச்சினைகள் அத்தனையையும் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதை மக்கள் உணர்ந்து உள்ளார்கள். கொரோனா காலத்தில் நிதிஷ்குமார் அரசு மிக மோசமாக செயல்பட்டு வருகிறது. ஏகப்பட்ட ஊழல் தலைவிரித்து ஆடுகின்றன. பீகாரில் ஒவ்வொரு நாளும் தினசரி சராசரியாக 4 முதல் 5 கொலைகள் நடக்கின்றன. பல லட்சம் மக்கள் வேலை இல்லாமல் தவித்து வருகிறார்கள். பீகார் மக்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் என்ற அளவுக்கு சுருங்கி போய் விட்டார்கள். இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் பேசினார். தொண்டர்கள் அவ்வப்போது கரகோஷம் எழுப்பி தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications