கல்லூரி மாணவர்களுக்கு மெகா இன்ப செய்தி.. 90,000 பேரை வேலைக்கு எடுக்க போகும் டாப் ஐடி நிறுவனங்கள்
டெல்லி: நமது நாட்டில் மிகப் பெரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களில் ஒன்றாக ஐடி துறை இருக்கிறது. கடந்த நிதியாண்டில் ஐடி துறையில் பெரியளவில் ஆள்சேர்ப்பு இல்லாத நிலையில், இந்தாண்டு அதிக பேரை வேலைக்கு எடுக்க ஐடி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 90,000 பேருக்கு ஐடி துறையில் புதிதாக வேலை வாய்ப்பு உருவாகி இருக்கிறது.
உலகளவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும்.. இதனால் ஐடி நிறுவனங்களில் மிகப் பெரியளவில் வேலையிழப்பு ஏற்படும் என சில மாதங்களாகவே சொல்லப்பட்டது. இருப்பினும், அந்தளவுக்கு மோசமான வேலையிழப்புகள் எதுவும் இல்லை.

ஐடி துறை: குறிப்பாக ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஐடி துறை வருவாய் நல்ல நிலையிலேயே இருக்கிறது. இதனால் ஐடி நிறுவனங்கள் மீண்டும் ஆள் எடுக்கும் படலத்தைத் தொடங்கிவிட்டன. இதற்கிடையே நாட்டின் டாப் ஐடி நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டில் மட்டும் 90,000 பேரைப் புதிதாக வேலைக்கு எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டிலேயே மிகப் பெரிய ஐடி நிறுவனமாக இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் 2025 நிதியாண்டில் சுமார் 40,000 பேரைப் புதிதாக வேலைக்கு எடுக்கத் திட்டமிட்டுள்ளது. அதேபோல நாட்டின் இரண்டாவது மிக பெரிய நிறுவனமான இன்போசிஸ் இந்த நிதியாண்டில் சுமார் 15,000-20,000 பேரை பணியமர்த்தத் திட்டமிட்டுள்ளது.
டிசிஎஸ்: டிசிஎஸ் நிறுவனம் ஏற்கனவே இந்த நிதியாண்டின் முதலாம் காலாண்டில் 5,452 பேரை வேலைக்கு எடுத்துள்ளது. இதன் மூலம் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை செய்வோரின் மொத்த எண்ணிக்கை 6,06,998ஆக உயர்ந்துள்ளது. நிறுவனத்தை விட்டு ஊழியர்கள் வெளியேறும் விகிதமும் (attrition rate) டிசிஎஸ் நிறுவனத்திற்கு இப்போது12.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் ஹெச்ஆர் பிரிவு அதிகாரி மிலிந்த் லக்காட் கூறுகையில், "கல்லூரிகளில் இருந்து மாணவர்களை நேரடியாக வேலைக்கு எடுப்பதே எங்கள் திட்டம். இந்தாண்டில் விரைவில் இதற்கான பணிகளைத் தொடங்குவோம். இப்போது எங்கள் நிறுவனத்திற்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அதற்கேற்ப ஆட்களை எடுப்போம்" என்றார்.
இன்ஃபோசிஸ்: இன்ஃபோசிஸ் நிறுவனம் கடந்த 2024 நிதியாண்டில் 11,900 பேரைப் புதிதாக வேலைக்கு எடுத்துள்ளது. இது அதற்கு முந்தைய 2023 நிதியாண்டில் வேலைக்கு எடுத்த 50 ஆயிரம் பேரை விட 76% குறைவாகும். இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி (CFO) ஜெயேஷ் சங்க்ராஜ்கா கூறுகையில், "இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இருக்கும் வளர்ச்சியைப் பொறுத்து, இந்த ஆண்டு 20,000 பேரைப் புதிதாக வேலைக்கு எடுக்கும் திட்டம் இருக்கிறது" என்று தெரிவித்தார்.
மற்ற நிறுவனங்கள்: அதேபோல ஹெச்.சி.எல் நிறுவனமும் நடப்பு ஆண்டில் 10,000 பேரைப் புதிதாக வேலைக்கு எடுக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த காலாண்டில் ஏற்கனவே 8000 பேரைப் புதிதாக ஹெச்.சி.எல் நிறுவனம் வேலைக்கு எடுத்துள்ள நிலையில், அங்கே வேலை செய்வோர் எண்ணிக்கை இப்போது 2.19 லட்சமாக அதிகரித்துள்ளது.
அதேபோல விப்ரோ நிறுவனமும் இந்தாண்டு மீண்டும் ஆள்சேர்பில் கவனம் செலுத்த இருப்பதாக விப்ரோவின் தலைமை ஹெச்ஆர் பிரிவு அதிகாரி சௌரப் கோவிலின் தெரிவித்துள்ளார். இந்தாண்டு மட்டும் சுமார் 10,000-12,000 பேரை வேலைக்கு எடுக்க உள்ளதாகத் தெரிவித்தார். அதேபோல டெக் மகேந்திரா நிறுவனமும் நடப்பு நிதியாண்டில் 6,000 பேரை வேலைக்கு எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வேலைவாய்ப்பு: இப்படி நாட்டில் இருக்கும் அனைத்து முன்னணி நிறுவனங்களும் மீண்டும் ஆட்சேர்ப்பில் கவனம் செலுத்தும் நிலையில், இந்தாண்டு மட்டும் சுமார் 90,000 பேருக்கு ஐடி துறையில் புதிதாக வேலை வாய்ப்பு உருவாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications