இந்தியா வர ரூ.89 கோடியை வாங்கிய மெஸ்ஸி.. ஆனாலும் பயங்கர கோபமாம்.. என்ன காரணம்! வெளியான தகவல்
டெல்லி: மெஸ்ஸியின் இந்தியப் பயணத்தில் அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதில் கொல்கத்தா நிகழ்வில் மட்டும் சில விரும்பத் தகாத நிகழ்வுகள் நடந்தன. இதற்கிடையே மெஸ்ஸியின் இந்தப் பயணத்தில் அவருக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட்டது.. கொல்கத்தாவில் நடந்த குழப்பத்திற்கு உண்மையில் யார் காரணம் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த டிசம்பர் 13ம் தேதி கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் அவர் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஹைதராபாத், மும்பை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. இருப்பினும், கொல்கத்தாவில் நடந்த நிகழ்வில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதற்காக மேற்கு வங்க அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

விசாரணை
கொல்கத்தாவில் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த சத்ரு தத்தாவிடம் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் சில முக்கிய தகவல்களைக் கூறியிருக்கிறார். அதாவது சால்ட் லேக் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது, எதிர்பாராத வகையில் பலரும் மைதானத்திற்குள் வந்துவிட்டதாகவும் அவர்கள் மெஸ்ஸியை பின்னால் இருந்து தொட்டதும், கட்டிப்பிடித்ததும் அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
அதிருப்தி
இது தொடர்பாக சத்ரு தத்தா கூறுகையில், "மெஸ்ஸிக்கு பின்னால் இருந்து வந்து பலரும் அவரை தொட்டனர். திடீரெனக் கட்டி அணைத்தனர். இது அவருக்குப் பிடிக்கவில்லை. இதன் காரணமாகவே அவர் முன்கூட்டியே கிளம்பினார். மெஸ்ஸிக்கு திடீரெனக் கட்டியணைப்பது பிடிக்காது என அவரது பாதுகாப்பு அதிகாரி முன்கூட்டியே கூறியிருந்தார். ஆனாலும், அப்படிப் பலர் நடந்து கொண்டனர். மேலும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த நாங்கள் எடுத்த நடவடிக்கைகளுக்கும் பலன் இல்லை. அவர் நடத்தப்பட்ட விதம் சரியாக இல்லை. இதன் காரணமாகவே அவர் முன்கூட்டியே கிளம்பிவிட்டார்" என்றார்.
மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ், நிகழ்ச்சி முழுவதும் மெஸ்ஸியுடன் மிக அருகில் இருந்தார். போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும்போது கூட மெஸ்ஸிக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. மேலும், விளையாட்டுத் துறை அமைச்சர் என்பதால் அரூப் பிஸ்வாஸ் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களும் மெஸ்ஸி அருகே செல்ல அனுமதித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், அரூப் பிஸ்வாஸ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதிகரித்த கூட்டம்
மைதானத்தில் எப்படி இவ்வளவு அதிகப் பேர் நுழைந்தனர் என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரிக்கிறார்கள். இது குறித்து ஒருங்கிணைப்பாளர் சத்ரு தாத்தா போலீஸ் விசாரணையில் கூறுகையில், "மொத்தமே நாங்கள் 150 பேருக்கு தான் கிரவுண்ட் பாஸ் கொடுத்திருந்தோம். ஆனால் கடைசி நேரத்தில் செல்வாக்கு மிக்க நபர் ஒருவர் மைதானத்திற்கு வந்ததும் பாஸ்களின் எண்ணிக்கை மும்மடங்கானது.. பலரும் உள்ளே வந்தனர். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அந்தச் செல்வாக்கு மிக்க நபர் வந்த பிறகு தான், அனைத்தும் சீர்குலைந்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது" என்றார்.
ரூ.100 கோடி செலவு
மெஸ்ஸியின் இந்தியப் பயணத்திற்காக லியோனல் மெஸ்ஸிக்கு ₹89 கோடி வழங்கப்பட்டது. மேலும், மத்திய அரசுக்கு ₹11 கோடி வரியாகச் செலுத்தப்பட்டுள்ளது. அதாவது மெஸ்ஸியின் இந்த பயணத்திற்கு மொத்தம் ₹100 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த தொகையில் 30 சதவீதம் ஸ்பான்சர்களிடமிருந்தும், 30 சதவீதம் டிக்கெட் விற்பனை மூலமாகவும் பெறப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சால்ட் லேக் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் மெஸ்ஸியை பார்க்கப் பல ஆயிரம் பேர் டிக்கெட் வாங்கி இருந்தனர். இருப்பினும், மைதானத்தில் பலர் மெஸ்ஸியை சூழ்ந்து கொண்டதால் மக்களால் அவரை பார்க்க முடியவில்லை. மைதானத்தில் இருந்தவர்களும் மெஸ்ஸியை அசவுகரியத்தை ஏற்படுத்திய நிலையில், அவர் பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் மைதானத்தின் சில பகுதிகளைச் சேதப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications