என்கிட்ட மோதாதே.. 2022-ல் எதிர்க்கட்சிகளை மிரள வைத்த மத்திய பாஜக அரசின் அதிரடி ரெய்டுகள் லிஸ்ட் இது!
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக அரசியல் ஆதாயங்களுக்காக மத்திய விசாரணை ஏஜென்சிகளை வைத்து ரெய்டு, கைது எனும் மிரட்டல் ஆயுதங்களை கையில் எடுத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சிக்கின்றனர். தமிழ்நாட்டில் ஆளும் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையும் அரசியல் பழிவாங்கல்தான் என்பது எதிர்க்கட்சிகளின் விமர்சனம்.
மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ், ஆட்சி செய்கிற பாஜக இரண்டுமே அரசியல் லாபங்களுக்காக அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல. காங்கிரஸ் ஆட்சியில் 356-என்ற அரசியல் சாசனப் பிரிவின் கீழ் மாநில அரசுகளை கலைத்து விளையாடி கொடூர ஜனநாயப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. இதற்கு உச்சநீதிமன்றம் கடிவாளம் போட்டது. இப்போது பாஜக ஆட்சியில் சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு சோதனைகள், கைதுகள் என மிரட்டல் நீடிக்கிறது.

2022-ம் ஆண்டு மட்டும் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் மத்திய விசாரணை ஏஜென்சிகள் நடத்திய சில ரெய்டுகளின் விவரம்:
பஞ்சாப்: ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்கிற மாநிலம். மத்தியில் ஆளும் பாஜக அரசை அடிபணிய வைத்தது ஓராண்டு விவசாயிகளின் போராட்டம். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்தவர்களை பழிவாங்குவதற்காக அம்மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் கடந்த ஆண்டு ஜனவரியில் 40 இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்தியது. அதுவும் சி.ஆர்.பி.எப். எனும் துணை ராணுவத்தின் பலத்துடன். கமிஷன் ஏஜெண்டுகளுக்கு சொந்தமான 40 குடோன்களில் நடத்தப்பட்டது இந்த சோதனை.
ராஜஸ்தான்: காங்கிரஸ் ஆட்சி செய்கிற மாநிலம். கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல்வர் அசொக் கெலாட்டின் சகோதரார் அக்ராசென் கெலாட்டின் ஜோத்பூர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது. உர ஊழல் தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 2007-2009-ம் ஆண்டு வழக்குக்காகவே இந்த விசாரணை நடத்தப்பட்டது. ராகுல் காந்தியிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரணை நடத்தப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் பிரம்மாண்ட போராட்டங்களை நடத்தியது. அப்போது அசோக் கெலாட் அதில் முக்கிய பங்கு வகித்தார். அதே காலகட்டத்தில் அசோக் கெலாட் சகோதரர் வீட்டில் ரெய்டு நடந்தது.
மகாராஷ்டிரா: தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் தொடர்புடைய பண மோசடி வழக்கில் 12 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.
கேரளா: இடதுசாரிகள் ஆட்சி செய்யும் மாநிலம். கூட்டுறவுவங்கியில் ரூ312 கோடி மோசடி நடந்தது எனக் கூறி 5 இடங்களில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.
சத்தீஸ்கர்: மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து சத்தீஸ்கரில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் ஒரு பகுதியாக தொழிலதிபர்கள் வீடுகளில் அமலாக்கப் பிரிவு ரெய்டு நடத்தியதாக முதல்வர் பூபேஷ் பாகல் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
ஜார்க்கண்ட்: காங்கிரஸ் - ஜேஎம் எம் கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலம். கடந்த ஆண்டு மே மாதம், மாஜி அமைச்சர் திர்கே தொடர்புடைய நிதி முறைகேடு வழக்கில் சிபிஐ ரெய்டு நடத்தியது. இவர் 2020-ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார்.
மேற்கு வங்கம்: கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மேற்கு வங்கத்தில் பல சோதனைகளை மத்திய விசாரணை ஏஜென்சிகள் நடத்தின. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை இலக்கு வைத்து பல்வேறு வழக்குகளை காரணம் காட்டி இந்த சோதனைகள் நடத்தப்பட்டன
டெல்லி: ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் மாநிலம். மணீஷ் சிசோடியாவை இலக்கு வைத்து சோதனைகள் நடத்தப்பட்டன. மதுபான கொள்கை ஊழல் என்ற பெயரில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.












Click it and Unblock the Notifications