அதிகாரத்தில் அதிகம் இருந்தது யார்? காந்தி குடும்பத்திலிருந்து காங்கிரஸ் தலைவரானவர்கள் லிஸ்ட்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று நிறைவடைந்துள்ள நிலையில், காந்தி குடும்பத்தை சேர்ந்த யாரெல்லாம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்துள்ளார்கள் என்று பார்க்கலாம்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்த ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து பதவி விலகினார். அதன் பின்னர் புதிய தலைவராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை.
காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சோனியா காந்தியே இடைக்கால தலைவராக பதவியேற்று கட்சியை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அக்டோபர் 17 ஆம் தேதியான நேற்று காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தல் முடிவு
அக்டோபர் 19 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 தேதி தொடங்கி கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் நேருக்கு நேர் மோதுகின்றனர். இதில் கார்கேவுக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

காந்தி குடும்பம் இல்லை
தொடர் தோல்வியில் துவண்டு கிடக்கும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப்பூசல் வெடித்துள்ள நிலையில் காந்தி குடும்பத்தை சாராதவர் கட்சியின் தலைவராக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ராகுல் காந்தியும் மீண்டும் தலைவராக விருப்பம் தெரிவிக்காததால் காந்தி குடும்பம் சாராத இருவர் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.

காந்தி குடும்ப தலைவர்கள்
காந்தி குடும்பத்தை பொறுத்தவரை 1919 மற்றும் 1928 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேருவும், 1929 முதல் 1930, 1936 - 1937, 1951 முதல் 1954 வரை மூன்று முறை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், 1959, 1966 முதல் 1967, 1978 - 1984 என மூன்று முறை இந்திரா காந்தியும், 1985 முதல் 1991 வரை ராஜீவ் காந்தியும், 1998 முதல் 2017, 2019 முதல் 2022 வரை இருமுறை பல ஆண்டுகள் சோனியா காந்தியும், 2017 முதல் 2019 வரை ராகுல் காந்தியும் காங்கிரஸ் தலைவர்களாக இருந்துள்ளனர்.

காந்தி குடும்பம் சாராதவர்கள்
இவர்கள் அல்லாமல் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜர், முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், போகராஜு பட்டாபி சித்தராமையா, புருசோத்தம் தாஸ் டாண்டன், யுஎன் தெபார், நீலம் சஞ்சீவன ரெட்டி, காமராஜர், நிஜலிங்கப்பா, பாபு ஜக்ஜீவன் ராம், ஷங்கர் தயாள் சர்மா, தேவாங்கா பருவா என காந்தி குடும்பத்தை சாராத பலரும் கட்சித் தலைவராகி உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications